பெங்களூரு-கர்நாடகாவில் பல்வேறு மாவட்டங்களில் இரண்டாமாண்டு பி.யு.சி.,க்கான செயல்முறை தேர்வு துவங்கியது.மாநிலத்தில் பி.யு., கல்வித்துறையின் சார்பில் இரண்டாமாண்டு மாணவர்களுக்கு பொது செயல்முறை தேர்வுகள் பிப்ரவரி 17 முதல் துவங்குவதற்கு ஏற்கனவே அட்டவணை அறிவிக்கப்பட்டது.இருப்பினும், பல மாவட்டங்களில் பி.யு.சி., கல்லுாரிகள் அரைகுறையாகவே செயல்படுகின்றன.சில மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நேற்று முதல் செயல்முறை தேர்வுகளை துவங்கி விட்டனர்.அந்தந்த மாவட்ட பி.யு.சி., கல்வித்துறை அதிகாரிகளுக்கு செயல்முறை தேர்வுகளை மாற்றி நடத்துவதற்கான அதிகாரம் இருப்பதால் சில மாவட்டங்களில் தேர்வுகள் நடத்தப்படவில்லை.தேர்வுகளை நடத்த மார்ச் 25 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், கல்லுாரிகளும் அவகாசம் எடுத்துக்கொண்டுள்ளன.பி.யு.சி., கல்வித்துறை இயக்குனர் ராமசந்திரா கூறியதாவது:ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், செயல்முறை தேர்வுகளை மாற்றி நடத்திக்கொள்வதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேர்வுகள் துவக்கப்பட்டுள்ளன. 90க்கும் அதிகமான கல்லுாரிகளில் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.சில கல்வி மாவட்டங்களில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் அவர்களுக்கு தேர்வு நடத்த கூடுதல் வசதிகள் செய்ய வேண்டும். அதனால் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement