புதுடெல்லி: பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரு தினங்களே நிலையில், தனது டெல்லி அரசு குடியிருப்பில் பிரதமர் நரேந்தர மோடி, சீக்கிய மதத் தலைவர்களுடன் சந்திப்பு நடத்தியுள்ளார்.
பிப்ரவரி 20-ல் ஒரே கட்டமாக பஞ்சாப்பின் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பஞ்சாப்பின் அரசியலில் அங்குள்ள சீக்கியர்கள் சமூகம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி தனது அரசு இல்லத்தில் சீக்கியர்களுடன் இன்று காலை ஒரு முக்கியச் சந்திப்பு நடத்தினார். இதில், பஞ்சாப்பின் ஆன்மீக மடங்களான டேராக்களின் தலைவர்களும், சீக்கிய மதத்தின் முக்கியத் தலைவர்களும் இடம்பெற்றனர்.
இக்குழுவில், டெல்லியின் குருத்துவாரா கமிட்டியின் தலைவர் ஹர்மித்சிங் கால்கா, பத்மஸ்ரீ விருது பெற்ற பாபா பல்பீர்சிங்ஜி சீச்சேவால், சேவாபந்த்தி, யமுனா நகரை சேர்ந்த மஹந்த் கரம்ஜித்சிங் ஆகிய சீக்கிய தலைவர்கள் இருந்தனர்.
டேராக்களின் தலைவர்களில் கர்னாலின் பாபா ஜங்சிங், பாபா ஜோகாசிங், அம்ருத்ஸரின் பாபா தார்சிங் மற்றும் சந்த் பாபா மேஜர்சிங்வா உள்ளிட்ட பலரும் இடம் பெற்றிருந்தனர். பஞ்சாப்பின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக இந்தச் சந்திப்பு அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பஞ்சாப்பில் சுமார் 27 வருடங்களாக பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்த சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) தனியாகப் பிரிந்துவிட்டது. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டதிருத்தங்கள் மக்களவையில் அமலானதும் பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்த எஸ்ஏடி, தன் அமைச்சரவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகியது. இதனால், இந்தமுறை தேர்தலில் பாஜக தன் தலைமையிலான புதிய கூட்டணி அமைத்துள்ளது. இதில், அகாலி தளத்தின் பிரிவான சுக்தேவ் தின்ஸாவின் அகாலி தளம் சம்யுக்த் மற்றும் கேப்டன் அம்ரீந்தர்சிங்கின் புதிய கட்சியாக பஞ்சாப் லோக் காங்கிரஸையும் சேர்த்துள்ளது.
எஸ்ஏடி தலைமையிலான கூட்டணியில், உபியின் முன்னாள் முதல்வரான மாயாவதியின் பகுஜன் சாமாஜை சேர்த்துள்ளது. காங்கிரஸுடன் சரிநிகர் போட்டியிலுள்ள ஆம் ஆத்மி கட்சி தன் தலைமையில் அமைத்த கூட்டணியில் சம்யுக்த் சமாஜ் மோர்ச்சாவை சேர்த்துக்கொண்டுள்ளது. இது, பஞ்சாபின் விவசாயிகளால் டெல்லி போராட்டத்திற்கு பின் துவக்கப்பட்ட புதிய கட்சி. இதுபோல் யாருடனும் கூட்டணி இன்றி காங்கிரஸ் மட்டுமே தனித்து போட்டியிடுகிறது.