பெங்களூரு: “இஸ்லாத்தில் ஹிஜாப் அணிவது அவசியமான மத நடைமுறை ஒன்றும் அல்ல. எனவே ஹிஜாப் அணிய விதித்த தடை, அரசியல் சாசன சட்டம் 25-ஐ மீறுகிறது என்ற வாதத்தை ஏற்க முடியாது” என்று கர்நாடக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு விதித்த தடையை எதிர்த்து உடுப்பி முஸ்லிம் மாணவிகள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவ்வழக்கு 6-வது நாளாக இன்று தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இன்று கர்நாடக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பிரபுலிங் நாவதகி வாதங்களை முன்வைத்தார்.
“ஹிஜாப் தடை நடவடிக்கையில், அரசு பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகிறது என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனை கண்டு அரசு வேதனை கொள்கிறது. அனைவரையும் சமமாக நடத்துவதில் அரசு நம்பிக்கை கொண்டுள்ளது. இதனை முழு மனதுடன் சொல்கிறோம். இஸ்லாத்தில் ஹிஜாப் அணிவது அவசியமான மத நடைமுறை ஒன்றும் அல்ல. எனவே ஹிஜாப் அணிய விதித்த தடை, அரசியல் சாசன சட்டம் 25-ஐ மீறுகிறது என்ற வாதத்தை ஏற்க முடியாது. இந்த வழக்கில் மாணவிகளின் சீருடையை மாற்ற கல்லூரி வளர்ச்சிக் குழு (சி.டி.சி.,) தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஆனால் இந்த தீர்மானத்துக்கு கீழ்ப்படியாமல், ஹிஜாப் அணிய மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஜனவரி 25 அன்று, மாநில அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழு இந்தப் பிரச்சினையை ஆலோசிப்பதால், தற்போதைய நிலை தொடர வேண்டும் என்று மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஜனவரி 31ஆம் தேதி, குழந்தைகள் ஹிஜாப் அணியக் கூடாது என்றும், பெற்றோர் பெண் குழந்தைகளை ஹிஜாப் அணிந்து அனுப்பினால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மூன்றாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இறுதியாக போராட்டங்கள் தீவிரமடைந்ததால் அரசு அரசாணை வெளியிட்டது. இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு நேரடியாக தலையிடவில்லை. கல்லூரி வளர்ச்சிக் குழுக்கள் பரிந்துரைத்துள்ள சீருடையை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டை மட்டுமே அரசு எடுத்தது. அரசு, இந்த விவகாரத்தில் கல்லூரி வளர்ச்சிக் குழுவுக்கும், தனியார் கல்லூரிகளுக்கும் முழு சுயாட்சி வழங்கியுள்ளது” என்று வாதிட்டார்.
தலைமை நீதிபதிகள், அவரை இடைமறித்து, “கல்லூரி வளர்ச்சிக் குழுக்கள் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதித்தால், உங்களுக்கு ஆட்சேபனை இல்லையா?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, வழக்கறிஞர் நவத்கி, “பிரிவு 131-ன் கீழ் மாநிலத்திற்கு மறுசீரமைப்பு அதிகாரங்கள் உள்ளன. எதிர்காலத்தில் இதில் மாணவர்களுக்கோ அல்லது அதிகாரிகளுக்கோ குறை இருந்தால் அரசு தடை குறித்து முடிவெடுக்கலாம் அல்லது எடுக்காமலும் போகலாம்” என்று பதில் கொடுத்தார்.