உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள Donetsk நகரத்தில் பயங்கர கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது ரஷ்ய தாக்குதலின் தொடக்கமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
ரஷ்ய படையெடுப்பு அச்சத்தின் மத்தியில் உக்ரைன் எல்லையில் உள்ள ரஷ்யா ஆக்கிரமிப்பு நகரங்களான Donetsk மற்றும் Luhansk-ல் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறுமாறு, அதனை ஆளும் ரஷ்ய சார்பு கிளர்ச்சியாளர்கள் உத்தரவிட்டனர்.
மக்களை அங்கிருந்து வெளியேறி எல்லையைக் கடந்து ரஷ்யாவிற்குள் நுழையுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
இவ்வாறு அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில், டொனெட்ஸ்கில் உள்ள பிராந்திய பாதுகாப்புத் தலைவரான டெனிஸ் சினென்கோவ் என்பவருக்கு சொந்தமானது கார் வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளானது.
இந்த சம்பவத்தில் யாரும் பலியானதாகவோ அல்லது காயமடைந்ததாகவோ அரசு ஊடகம் உடனடியாக தெரிவிக்கவில்லை. ஆனால், இது உக்ரைனின் படுகொலை முயற்சி என குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால் இதனை மறுத்துள்ள உக்ரைன் அரசு, இது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் சதித்திட்டமாக இருக்கலாம் என கூறியுள்ளது.
திட்டமிட்டு ஒரு சதிவேலையை செய்துவிட்டு, அதனை இன்னொருவர் மீது பழி சுமத்தும் ‘False Flag’ என்று சொல்லக்கூடிய சதித்திட்டமாக இருக்குமென உக்ரைன் தரப்பு கூறியுள்ளது.
எல்லையில் தனது 200,000 துருப்புகளை உள்ளே அனுப்ப தயாராக இருக்கும் ரஷ்யாவுக்கு, இது படையெடுப்பதற்கான ஒரு சாக்குப்போக்காக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.