லக்னோ: உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் நீண்ட நாட்களுக்கு பிறகு பிரசார களத்தில் முலாயம் சிங், நேற்று தனது மகனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நாட்டின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜ ஆட்சி நடந்து வருகிறது. இங்கு 403 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. ஆளும் பாஜவுக்கும், சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகளும் களத்தில் உள்ளன. பாஜவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாகவும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நேரடியாகவும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர். சமாஜ்வாதி கட்சிக்காக அதன் தலைவர் அகிலேஷ்யாதவும், பகுஜன் சமாஜுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் மாயாவதியும், காங்கிரசுக்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்காவும் களமிறங்கியுள்ளனர். அங்கு முதல், 2ம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. 3ம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடக்கிறது. இன்னும் 5 கட்ட வாக்குப்பதிவுகள் மீதம் இருக்கிறது. எம்பி.யாக உள்ள சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம்சிங் யாதவ், முதுமை காரணமாக ஓய்வெடுத்து வருகிறார். அதனால் அவர் தேர்தல் பிரசாரங்களில் தலை காட்டாமல் இருந்து வந்தார். இந்நிலையில், முதல்முறையாக தேர்தல் பொதுக்கூட்டத்தில் முலாயம்சிங் பங்கேற்றார். தன் மகனும், சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவ் போட்டியிடும் கர்ஹால் தொகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ‘உலகத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பார்வை, இந்த தேர்தலில் சமாஜ்வாதி மீது விழுந்துள்ளது. தேர்தல் முடிவை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால், ஒரு விஷயம் உறுதி. மக்களின் எதிர்பார்ப்புகளை சமாஜ்வாதி கட்சி பூர்த்தி செய்யும். மக்கள் பிரச்னைகளான வறுமை, வேலையின்மை ஆகியவற்றுக்கு தீர்வு காணப்படும். விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிப்பதுதான் சமாஜ்வாதியின் கொள்கை. அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும். அதன்மூலம் விளைச்சல் பெருகினால், விவசாயிகள் வாழ்க்கை தரம் உயரும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். வியாபாரிகளுக்கு தேவையான வசதிகளும் உருவாக்கப்படும். இங்கு திரண்டு வந்துள்ள மக்கள், அகிலேஷ் யாதவை வெற்றி பெற செய்ய வேண்டும்’ என்றார். மேடையில், அகிலேஷ் யாதவ், முலாயம்சிங் யாதவின் காலை தொட்டு வணங்கினார். அகிலேஷ் யாதவ் பேசுகையில், ‘‘இந்த ஊர், முலாயம்சிங் படித்த ஊர். தனது அரசியலை தொடங்கிய ஊர். 4-ம் கட்ட தேர்தலுக்குள், ஆட்சி அமைக்க தேவையான இடங்களை சமாஜ்வாதி கட்சி பெற்று விடும். மாமாவின் (சிவ்பால் சிங் யாதவ்) வருகை இந்த தேர்தலில் எங்களின் பலத்தை பலப்படுத்தும். உ.பி. தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க உதவும்’ என்றார்.அகிலேஷுக்கு தோல்வி பயம்: அமித்ஷா தாக்குமுலாயம் சிங் பிரசாரம் மேற்கொண்ட அதே மெயின்புரி பகுதியில் 3 கி.மீ. இடைவெளியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். சமாஜ்வாதி கட்சியை குடும்ப கட்சி என கூறிய அவர், ‘அக்கட்சி ஆட்சியில் இருந்தபோது அகிலேஷ் யாதவின் குடும்பத்தினர் 45 பேர் அரசு பொறுப்புகளில் இருந்தனர்’ என்றார். மைன்புரி பிரசாரத்தில் அவர் மேலும் பேசுகையில், ‘வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மார்ச் 10ம் தேதியன்று வெற்றி பெற்றுதான் எனது தொகுதியான கர்ஹாலுக்கு வருவேன் என்று அகிலேஷ் யாதவ் கூறியிருந்தார். தற்போது தனது தந்தையுடன் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.உத்தரபிரதேசத்தில் 300 தொகுதிகளில் பாஜ வெற்றி பெற வேண்டும் என்றால் கர்ஹல் தொகுதியை கைப்பற்ற வேண்டும். இந்த தொகுதியில் வெற்றி பெற்றால் மாநிலத்தில் இருந்தே சமாஜ்வாதி கட்சியை வெளியேற்றி விடலாம். நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி கட்சி உத்தரபிரதேச ஏழைகளுக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால், 2014ல் இருந்து மத்தியில் ஆளும் பாஜ அரசு உத்தரபிரதேசத்துக்கு பணியாற்றி வருகிறது. கொரோனா தடுப்பூசிகளை முதலில் நிராகரித்த அகிலேஷ் யாதவ், பின்னர் அச்சத்தின் காரணமாக செலுத்தி கொண்டார். ஏழைகளின் வலியை தேனீர் விற்ற தந்தையின் மகனான பிரதமர் மோடி புரிந்து கொண்டுள்ளார். ஆனால், ஏழைகளின் கட்சி என கூறிக்கொள்ளும் சமாஜ்வாதி, பணக்காரர்களுக்கும், குடும்பத்தினருக்கும் மட்டும் உழைக்கிறது. உத்தரபிரதேசத்தில் பாஜ ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதால் யாருக்கும் தொந்தரவு ஏற்படவில்லை’ என்றார்.