பல நாடுகளிலும் அலை அலையாக கொரோனா வந்து குதறி எடுத்து விட்டுப் போன போதிலும் கூட சில நாடுகளில் கொரோனா இதுவரை எட்டிப் பார்க்கக் கூட இல்லை. இப்படிப்பட்ட நாடுகளும் பூமியில் உள்ளன.
கடந்த 2 வருடமாக கொரோனா பரவல் குறையாமல் நீடித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 3 அலைகளாக பரவல் இருந்தது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் முதல் அலையில் மிகப் பெரும் உயிரிழப்பை சந்தித்தன. 2வது அலையிலும் அதே நிலைதான் ஏற்பட்டது. ஓமைக்ரான் வந்த பிறகுதான் உயிரிழப்புகள் குறைந்தன. தற்போது உலகம் முழுவதும் கொரோனா பரவல் சற்று மட்டுப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சில நாடுகளில் இதுவரை கொரோனா வரவே இல்லை என்பது ஆச்சரியமானது. இந்த நாடுகளில் பெரும்பாலானவை குட்டித்
தீவுகள்
ஆகும். இங்கு வெளியிலிருந்து ஆட்கள் வருவது மிக மிக குறைவு. இதனால்தான் இந்த நாடுகளில் கொரோனா எட்டிப் பார்க்கவில்லை என்று
உலக சுகாதார நிறுவனம்
தெரிவித்துள்ளது.
இவற்றில் பெரும்பாலான நாடுகள், பிரதேசங்கள், பசிபிக் மற்றும் அட்லான்டிக் கடலில் அமைந்துள்ளன. இந்த நாடுகளில் டோங்கா சற்று வித்தியாசமானது. கொரோன பரவல் தொடங்கியது முதல் இங்கு கொரோன வராமல் இருந்தது. ஆனால் சமீபத்தில் இங்கு எரிமலை வெடித்து பெரும் சேதம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்து உதவிப் பொருட்களுடன் கப்பலில் பலர் இங்கு வந்தனர். இதைத் தொடர்ந்து டோங்காவிலும் கொரோனா பரவி விட்டது. அதே போல கொரோனாவே இல்லாத குக் தீவிலும் கடந்த வாரம் முதல் கேஸ் பதிவானது.
தூவலு நாட்டில் இதுவரை கொரோனா பரவவில்லை. உலக நாடுகளில் கொரோனா பரவத் தொடங்கியதுமே தனது எல்லைகளை இந்த குட்டி நாடு மூடி விட்டது. இங்குள்ள மக்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு முழு அளவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
டோகேலா என்பது இன்னொரு குட்டி தீவு நாடு. இங்கும் இதுவரை கொரோனா பரவில்லை. இது நியூசிலாந்துக்கு அருகே உள்ளது. இங்கு விமான நிலையமும் கூட உள்ளது. 1500 பேர் இங்கு வசிக்கிறார்கள். மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இந்த தீவு இருப்பதால் இங்கு கொரோன பரவல் ஏற்படவில்லை.
செயின்ட் ஹெலினா என்பது அட்லான்டிக் கடலில் உள்ள குட்டித் தீவு. இது பிரிட்டிஷ் அரசுக்குச் சொந்தமான பிரதேசமாகும். இங்கும் கொரோனா பரவல் ஏற்படவில்லை.
இதேபோல பிட்காரின் தீவுகள், நியூ, நவரு, மைக்ரோனேசியா ஆகிய தீவுகளிலும் கொரோனா இதுவரை பரவவில்லை.
இவை தவிர துர்க்மேனிஸ்தான் மற்றும் வட கொரியாவில் இதுவரை ஒரு கொரோனா கேஸ் கூட இல்லை என்று ஹூ தெரிவித்துள்ளது. இந்த நாடுகளில் கொரோனா பரவல் தொடர்பாக எந்தவிதமான அதிகாரப்பூர்வ பதிவுகளும் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.