நாக்பூர்: வாகனங்களை இயக்கும்போது, ஓட்டுநர்கள் தங்களை மீறி கண்ணயர்ந்தால் அதனைத் தடுக்கும் அலாரத்தை நாக்பூர் ஓட்டுநர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் பலநேரங்களில் ஓட்டுநர்கள் தங்களைமீறி கண்ணயர்ந்துவிடுவதும் ஒரு காரணமாக இருக்கிறது. இதனை தடுக்கும் விதமாக நாக்பூரைச் சேர்ந்த கவுரவ் சவ்வாலாகே ஒரு புதிய கருவியைக் கண்டுபிடித்துள்ளார். வண்டிஓட்டும்போது ஓட்டுநர்களின் உறக்கத்தைத் தடுக்கும் அலாரமாக அது செயல்படுகிறது.
3.6 வோல்ட் பேட்டரி போதுமானதாக உள்ள இந்தக் கருவியில் ஆன் ஆப் சுவிட்ச் உண்டு. இதை எப்போதும் பயன்படுத்த வேண்டுமென்பது அவசியமில்லை. ஆனால் ஓட்டுநருக்கு தெரியும். நமது உடல் தூக்கமின்மையால் ஒத்துழைக்கவில்லை என்று… அல்லது ஏதோ ஒரு அயர்வு. அந்த மாதிரி நேரங்களில் அவர் தனது காதின் பின்புறத்தில் பொருத்திக்கொள்ளலாம். அப்போது, ஓட்டுநரின் தலை ஸ்டியரிங்கை நோக்கி 30 டிகிரி சாய்ந்தாலே போதும் அலாரம் சாதனம் அதிர்வுறத் தொடங்கிவிடும். எச்சரிக்கையை ஒலியை வெளியிடும்.
இது குறித்து இக்கருவியை உருவாக்கியவரும் ஓட்டுநருமான கவுரவ் சவ்வாலாகே ஏஎன்ஐயிடம் கூறுகையில், “சமீபத்தில் தூக்கத்தின் காரணமாக இரவில் வாகனம் ஓட்டும்போது விபத்துக்குள்ளானேன். விபத்திலிருந்து மீண்ட பிறகு எனக்குத் தோன்றியதெல்லாம் இதற்கு ஒரு தீர்வு காணவேண்டுமென்பதுதான். எனவே, வாகனம் ஓட்டும்போது யாராவது தூங்கினால், விபத்தைத் தவிர்க்கும் வகையில் அலர்ட் தரும் சாதனத்தை உருவாக்க நினைத்தேன். வாகனம் ஓட்டும்போது நாம் நம்மை மீறி சற்றே தூக்கத்தில் கண்ணயர்ந்து 30 டிகிரி கோணத்தில் நம் தலை சாய்ந்தால், இந்த சாதனத்திலிருந்து அலாரம் அடிக்கிறது, அது அதிர்வு ஏற்படுத்தி ஓட்டுநரை எழுப்பிவிடும்” என்றார்.