கனடா பிரதமரை ஹிட்லருடன் ஒப்பிட்ட எலான் மஸ்க்..!

ஒட்டாவா,
கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் லாரி டிரைவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் மற்றும் அமெரிக்காவில் இருந்து கனடா திரும்பும் லாரி டிரைவர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என கனடா அரசு அறிவித்தது. இதை எதிர்த்து கனடாவில் தலைநகர் ஒட்டாவாவில் லாரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டத்தின் ஒரு பகுதியாக கனடா – அமெரிக்காவை இணைக்கும் முக்கிய பாலமான தி அம்பாசிடர் பாலத்தை போராட்டக்காரர்கள் முடக்கினர். அதன்பின்னர், அந்த மேம்பாலம் மூடப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தினார். 
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் நிதியுதவியை குறைக்கும் வகையில் வங்கிகளுக்கு ட்ரூடோவின் அரசாங்கம் உத்தரவிட்டதை விமர்சித்து டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க், கடந்த புதன்கிழமை நள்ளிரவில் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். 
அந்த பதிவில் அவர், மீம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அந்த மீமில் ஹிட்லரின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. மேலும் அந்த புகைப்படத்திற்கு மேல் ‘என்னை ஜஸ்டின் ட்ரூடோவுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள்’ என்றும் அதன் கீழே என்னிடம் பட்ஜெட் இருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 
ஜஸ்டின் ட்ரூடோவை ஹிட்லருடன் ஒப்பிட்டு பதிவிட்ட எலான் மஸ்க்கிற்கு பல்வேறு தரப்பிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து எந்தவித விளக்கமும் இன்றி எலான் மஸ்க் அந்த டுவிட்டர் பதிவை நேற்று (வியாழக்கிழமை) மதியம் நீக்கினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.