புதுடில்லி:இமயமலையில், பூஜ்ஜியத்திற்கும் குறைவான கடும் குளிர் மற்றும் முழங்கால் வரை புதையும் பனி மலையில், வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும், ‘வீடியோ’ சமூகவலைதளங்களில் வெளியாகி பாராட்டுக்களை குவித்து வருகிறது. பனி மலைகள் சூழ்ந்த எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக ஐ.டி.பி.பி., எனப்படும், இந்தோ திபெத் எல்லை போலீஸ் படை, 1962ல் உருவாக்கப்பட்டது. இந்தப்படையின் வீரர்கள், லடாக்கின் கரகோனம் பாஸ் துவங்கி, அருணாசல பிரதேசத்தின் ஜாசெப் லா வரை 3,488 கி.மீ., தொலைவுள்ள எல்லைப் பகுதியை பாதுகாக்கின்றனர்.
இவர்கள் பணியாற்றும் மலைப்பகுதிகள் கடல் மட்டத்தில் இருந்து குறைந்தது 9,000 அடியாகவும் அதிகபட்சம் 18 ஆயிரத்து 800 அடியாகவும் உள்ளன. அங்கு சில நேரங்களில், ‘மைனஸ் 45 டிகிரி’ வரை கடுங்குளிர் நிலவும்.இந்நிலையில், உத்தரகண்டின் இமயமலைப் பகுதியில், கடல்மட்டத்தில் இருந்து 15 ஆயிரம் அடி உயரத்தில் இந்தோ திபெத் எல்லை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும், ‘வீடியோ’ சமூகவலைதளத்தில் வெளியாகி உள்ளது.
இதில், முழங்கால் அளவு புதையும் பனி மலையில், கையில் நீண்ட தடியுடன் நடக்கும் வீரர்கள், ஒவ்வொரு அடியையும் தடியால் குத்தி பார்த்து ஜாக்கிரதையுடன் நடக்கின்றனர். ஒருவரை ஒருவர் இணைக்கும் விதமாக கயிறு கட்டி உள்ளனர். பனிமலையில் வீரர்கள் ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும்போதும், அது பார்ப்பவர்களை திகிலடைய செய்கிறது. உயிரை பணயம் வைத்து நாட்டை பாதுக்கும் வீரர்களின் தியாகத்திற்கு, சமூகவலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
Advertisement