கர்நாடகாவில் காவி கொடி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அமைச்சர் ஈஸ்வரப்பா பதவியில் இருந்து விலகக்கோரி, சட்டப்பேரவைக்குள் உறங்கி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினர்.
முன்னதாக கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா, “டெல்லி செங்கோட்டையில், ஒரு நாள் மூவர்ண கொடிக்கு பதிலாக காவி கொடி பறக்கும்” என அண்மையில் பேசியிருந்தார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஈஸ்வரப்பா பதவி விலகக் கோரி, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் கர்நாடக சட்டப்பேரவைக்குள் நேற்றிரவு உறங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக தலையணை, படுக்கை விரிப்புகளுடன் சட்டப்பேரவைக்குள் வந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஈஸ்வரப்பா பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
அவர்களின் இந்த தர்ணாவை கைவிடக்கோரி கர்நாடக இந்நாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, சபாநாயகர் விஷ்வேஷ்வர் உள்ளிட்டோர் சமாதானம் செய்ய முயன்ற போதிலும், காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடாமல் இருந்தனர்.
இதுதொடர்பாக பேசிய கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, “நாங்கள் இரவு முழுவதும் பேரவையில் தங்கி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இரவு மட்டுமன்றி, பகலிலும் எங்கள் போராட்டம் தொடரும். ஈஸ்வரப்பா, துரோகம் செய்திருக்கிறார். நமக்கெலாம் பெருமை தரும், நம் நாட்டின் இறையாண்மையை போற்றும் நம் நாட்டின் தேசிய கொடியை, அவமதித்துள்ளார் அவர். அவரின் இச்செயலை தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு செல்ல நாங்கள் முடிவு செய்துள்ளோம்” எனக்குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய செய்தி: “தபால் ஓட்டுகளில் முறைகேடு”- மணப்பாறை அதிமுக வேட்பாளர் குடும்பத்துடன் சாலைமறியல்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM