ரவுடிகளை வைத்து குறுக்கு வழியில் வெற்றி பெற திமுக முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளர்.
திமுக அரசின் தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பாக தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தில் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார்,பென்ஜமின் மற்றும் சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர். பாபு முருகவேல் உள்ளிட்டோர் புகார் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்,
வாக்கு எண்ணிக்கை அன்று திமுக அரசு முழுமையாக தோல்வியை சந்திக்கும் என்ற அடிப்படையில் எப்படியாவது அதிமுக -வின் வெற்றியைத் தட்டிப் பறிக்கவேண்டும் என்றும், குறுக்கு வழியில் வெற்றி பெறவேண்டும் என்ற வகையிலும் மாநிலத்தில் பல மாநகராட்சிகளில் குண்டர்கள், ரவுடிகள், சமூக விரோதிகளை இறக்குமதி செய்து, அந்தத்தந்த சட்டமன்றத் தொகுதிக்குள் பதுக்கி வைத்துள்ளார்கள் என்று குற்றம் சாட்டினார்.
மேலும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சமூக விரோதிகள், குண்டர்களை உடனடியாக அந்த இடங்களில் இருந்து வெளியேற்ற மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வாக்குச் சாவடிகளின் உள்ளே சென்று ஏஜெண்டுகளை வெளியே அனுப்பிவிட்டு முழுமையாக பூத்தைக் கைப்பற்ற இந்த ரவுடிகளை திமுக பயன்படுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மாநிலத் தேர்தல் ஆணையம் காவல்துறையை முடுக்கிவிட்டு, இதுபோன்ற செயல்கள் வாக்குப்பதிவு அன்று நடைபெறாத அளவுக்கு,100 சதவீதம் சுதந்திரமாகவும் நியாமாகவும் தேர்தல் நடத்துவதை உறுதிபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை மனுவை மாநில தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளதாக ஜெயக்குமார் தெரிவித்தார்.
கோவையில் குண்டர்கள், ரௌடிகள் முழுமையாகக் குவிக்கப்பட்டு, கோவை மாநகராட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற வகையில், திமுக அரசு கங்கணம் கட்டிக்கொண்டு சட்டத்திற்கு விரோதமான செயல்களை அரகேற்ற முயற்சிப்பதாகவும், ஜனநயக ரீதியில் போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோரை ஜனநயகமற்ற முறையில் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சென்னை, திருச்சி, கோவை, திருப்பூர், சேலம், மதுரை போன்ற பதற்றம் நிறைந்த மாநகராட்சிகளில் மட்டுமாவது துணை ராணுவப் படை பாதுகாப்பில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.