கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதை கைவிட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ’’கூடங்குளத்தில் அணுக்கழிவு மையத்தை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். தமிழக மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம், நலனை கருத்தில்கொண்டு முடிவை கைவிட வேண்டும். அணுக்கழிவுகளை அகற்றுவது தொடர்பாக பொதுமக்களிடையே உள்ள கவலையை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். அணு மின்நிலைய வளாகத்திலேயே அணுக்கழிவு மையம் அமைக்கும் முடிவானது மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அணுக்கழிவுகளை சேமித்து வைப்பதால் ஏற்படும் அபாயங்கள், ஆபத்துகள் தொடர்பான மக்களின் அச்சத்தை பகிர்ந்துகொள்கிறேன். கூடங்குளத்தின் அணுக்கழிவுகளை மீண்டும் ரஷ்யாவுக்கே கொண்டுசெல்ல நடவடிக்கை மேற்கொள்ளலாம். அது, சாத்தியப்படாத பட்சத்தில் மக்கள் வசிக்காத, சூழலியல் அல்லாத பகுதியில் நிலத்தடி ஆழ்நிலை கிடங்கு அமைத்து சேமிக்கலாம்’’ எனக் கூறியுள்ளார்.
ஏற்கெனவே எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பூவலகின் நண்பர்கள் குழு இதுபற்றி பேசியிருந்த நிலையில் தமிழக அரசின் நிலைப்பாட்டை முதல்வர் கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM