நாளை நடைபெறும் வாக்குப்பதிவில் மாலை 5 மணியில் இருந்து 6 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் தமிழகம் முழுவதும்ன்நாளை ஒரே கட்டமாக நடத்தப்படும் எனவும், வாக்குப்பதிவானது காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் மாநில தேர்தல் ஆணையம் யெரிவித்துள்ள நிலையில், கடைசி ஒரு மணி நேரம், அதாவது, மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் மற்றும் தொற்று பாதிப்பு உள்ள நபர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கான தேர்தலின் போது, வாக்காளர்கள் அனைவரும் மாலை 5 மணிக்கு முன்னதாக வந்து வாக்களிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாக்குச்சாவடிகளில் மாலை 5 மணிக்கு முன்னதாக வரும் வாக்காளர்களுக்கு மட்டுமே வாக்குச்சாவடி அலுவலர்களால் உரிய டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மாலை 5 மணிக்கு பிறகு வருபவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் மற்றும் தொற்று பாதித்த நபர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு இருக்கும் நிலையில், இவர்கள் தகுந்த பாதுகாப்பு உடை அணிந்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என மாநகராட்சியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.