கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு மற்றும் காவிரி ஆகிய நதிகளை இணைத்து அதன் மூலம் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு உபரி நீர் அளிக்கும் திட்டத்துக்கு தெலங்கானா மற்றும் ஆந்திரா ஒத்துழைப்பு அளிக்காமல் முட்டுக்கட்டை போடுகின்றன.
இந்த நான்கு நதிகளை பல்வேறு கால்வாய்கள் மூலம் இணைத்தால், தமிழகத்துக்கு முதல் கட்டத்திலேயே 80 டிஎம்சி தண்ணீர் கிடைக்கக்கூடும் என்றும், திட்டம் முழுவதுமாக செயல்படுத்தப்பட்டால் 200 டிஎம்சி தண்ணீர் வரை தமிழகத்திற்கு கிடைக்கும் எனவும் தமிழக அரசு கருதுகிறது.
ஆனால் தெலங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்கள் நிலுவையில் உள்ள தங்களுடைய பாசனத் திட்டங்களை செயல்படுத்திய பிறகு உபரிநீர் எதுவும் இருக்காது என மத்திய ஜல்சக்தி அமைச்சகம் வெள்ளிக்கிழமை நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளன. இதைத் தவிர கோதாவரி நதி படுகையில் உள்ள உபரி நீரை பயன்படுத்திக்கொள்ள சத்தீஸ்கர் மாநிலம் உரிமை கோரி உள்ளது.
இன்றைய கூட்டத்தில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்பதால், மீண்டும் ஆலோசனையை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு கட்ட ஆலோசனைகள் காணொளி மூலம் நடத்தப்பட்ட நிலையில், 3வது கூட்டம் இன்று நேரடியாக டெல்லியில் உள்ள ஷரம்-சக்தி பவனில் நடைபெற்றது.
கோதாவரி-கிருஷ்ணா-பெண்ணாறு-காவிரி இணைப்பு தொடர்பான அறிவிப்பு 2022-23 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த திட்டத்துக்கு சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒத்துழைப்பை பெற தமிழக அரசு முயற்சிகளை தொடங்கியது. இதன் முக்கிய கட்டமாக மத்திய ஜல்சக்தி துறை செயலாளர் பங்கஜ் குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்சேனா மற்றும் காவேரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் உரையின் போது தென்னிந்திய நதிகள் இணைப்பு தொடர்பாக மாநிலங்களிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டால் திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்படும் என பேசியதன் அடிப்படையில் கருத்தொற்றுமை தேவை என்பது தமிழகத்தின் நிலைப்பாடாக இருந்தது. இதனைத்தொடர்ந்து தமிழக அரசின் கோரிக்கை அடிப்படையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தை மத்திய அரசு கூடியது குறிப்பிடத்தக்கது.
இதில் கலந்துகொண்ட தெலங்கானா அரசு பிரதிநிதிகள் தெலங்கானா மாநிலத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் கோதாவரியை காவிரியுடன் இணைத்தால் மாநிலத்தில் நீர் தட்டுப்பாடு ஏற்படும் என தெரிவித்தனர். கர்நாடகா மாநிலத்தை பொறுத்தவரை காவிரி-கோதாவரி இணைப்புக்கு கர்நாடகா அரசு எதிராக நிற்காது என்றும், அதே நேரத்தில் காவிரி-தென்பெண்ணை நதிகள் இணைப்புக்கு கர்நாடகா அரசுக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்தனர். ஆகவே தெலங்கானா, ஆந்திர மற்றும் கர்நாடக மாநிலங்களை திட்டத்திற்கு சம்மதிக்க வைத்து, பிறகு பணிகளை தொடங்கும் பொறுப்பு தமிழகத்துக்கு அதிகரித்துள்ளது.
மத்திய அரசு நதிகள் இணைப்பு திட்டத்தை ஆதரிக்கும் நிலையில், புதுச்சேரி அரசும் தமிழகத்தின் நிலைப்பாட்டுக்கு வலிமை சேர்க்கிறது. ஆனால் அனைத்து மாநிலங்களும் ஒத்துக்கொண்ட பிறகே திட்டம் உறுதியாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
– கணபதி சுப்ரமணியம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM