கோவை:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் முடிந்துள்ள நிலையில், ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. தேர்தலை நியாயமான முறையில் நடத்த வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் அனைத்து வார்டுகளிலும் போலீஸ் துணையுடன் பரிசுப்பொருள் விநியோகம் செய்யப்படுவதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். வெளியூரை சேர்ந்தவர்கள் இங்கேயே தங்கி வன்முறையை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கோவையில் வாக்காளர்களுக்குப் பணம், அண்டா, ஹாட் பாக்ஸ், வெள்ளிக் கொலுசு (அதுவும் அசல் ‘கழக’ தயாரிப்பு) என ஜனநாயகம் கேலிக்கூத்தாகியுள்ளதை ஊடகங்களும், எங்களைப் போன்ற மாற்றுக்கட்சிகளும் அம்பலப்படுத்தியும் பலனில்லை. நடவடிக்கை எடுக்கக் கோரி இன்றும் புகாரளித்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
அந்த புகார் மனுவில், கோவையில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் பல இடங்களில் பணம் மற்றும் பரிசுப்பொருள் வழங்குவதாகவும், இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், கோவை மாநகரம் முழுவதும் ஒரு பத்திரிகை மூலமாக, முதல்வர் ஸ்டாலின் படத்தை அச்சிட்டு ‘திமுக வசமாகும் கோவை’ என்ற சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆகையால் இந்த குற்றச்சாட்டுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மக்கள் நீதி மய்யம் தனது புகார் மனுவில் கூறி உள்ளது.