புதுடில்லி: சர்ச்சைக்கு மத்தியில், கடந்த ஜனவரியில் மட்டும், 47 கோடி ரூபாய் மதிப்பிலான, 1.2 கோடி, ‘மோல்னுபிரவிர்’ கொரோனா மாத்திரைகளை, இந்திய மக்கள் வாங்கி உள்ளனர்.
நாட்டில், கொரோனா வைரஸ் பரவத் துவங்கியது முதல், அதற்கு பல மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு வந்தன. கடந்த டிசம்பர் மாதம், அமெரிக்க நிறுவனம் தயாரித்த மோல்னுபிரவிர் மாத்திரைக்கு, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம், அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்தது. இதையடுத்து, நாட்டில் உள்ள 13 மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு, மோல்னுபிரவிர் மாத்திரைகளை தயாரித்து வினியோகிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஜனவரி 5ம் தேதி, ஐ.சி.எம்.ஆர்., பொது இயக்குனர் டாக்டர் பல்ராம் பார்கவா கூறுகையில், ‘மோல்னுபிரவிர் மாத்திரையால் பெரிய பாதிப்புகள் ஏற்படலாம். ‘கரு வளர்ச்சியை பாதிக்கக்கூடும். மரபணு மாற்றத்திற்கும் வழிவகுக்கும்’ என்றார். அது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ‘இக்வியா’ என்ற தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில், கடந்த ஜனவரி மாதம் மட்டும், 46.5 கோடி ரூபாய் மதிப்பிலான, 1.2 கோடிக்கும் அதிகமான மோல்னுபிரவிர் மாத்திரைகளை, நாட்டு மக்கள் வாங்கி உள்ளது தெரியவந்துள்ளது.இதில், ‘ஹெடேரோ’ நிறுவனம், அதிக வருவாய் ஈட்டி உள்ளதும்; ஜே.பி., கெமிக்கல்ஸ் நிறுவனம், அதிக மாத்திரைகளை விற்பனை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
Advertisement