கொல்கத்தா:
மேற்குவங்காள மாநிலம் தெற்கு டம்டம் நகராட்சி தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெற இருக்கிறது.
இதில் 9-வது வார்டில் போட்டியிட சுர்ஜித்ராய் சவுத்ரி என்பவர் விருப்பமனு செய்திருந்தார். ஆனால் அவருக்கு பதில் மனைவி ரீட்டா ராய் சவுத்ரிதாசுக்கு சீட் வழக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
வேட்பாளர் பட்டியல் வெளியான சில மணி நேரத்தில் அந்த வார்டில் தும்பாதாஸ் கோஷ் என்பவருக்கு 9-வது வார்டு ஒதுக்கப்பட்டது. இதை சரிகட்டும் வகையில் சுர்ஜித் ராய் சவுத்ரிக்கு 10-வது வார்டில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இதனால் 9-வது வார்டில் ரீட்டா ராய் சவுத்ரிதாசை வாபஸ் வாங்குமாறு கட்சி மேலிடம் வலியுறுத்தியது. அவரது கணவரும், கட்சி தொண்டர்களும் போட்டியில் இருந்து விலகுமாறு அறிவுறுத்தினார்கள்.
ஆனால் கணவர் வேண்டுகோளை அவர் நிராகரித்தார். கட்சி சீட் கொடுக்காவிட்டாலும் நான் சுயேட்சையாக போட்டியிடுவேன் என அறிவித்தார். இதுதொடர்பாக கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியும் சூழ்நிலை உருவானது.
கணவருடன் ஏற்பட்ட சண்டையால் ரீட்டா ராய் சவுத்ரி தாஸ் வீட்டை விட்டு வெளியேறி பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்தநிலையில் ராய் சவுத்ரி தனது மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘‘கட்சியை என்னால் விட்டுக் கொடுக்க முடியாது. இதனால் என் அரசியல் வாழ்க்கை பறிபோய்விடும். இதை கருத்தில் கொண்டு விவாகரத்து செய்ய முடிவு செய்து நோட்டீஸ் அனுப்பினேன்’’ என்று தெரிவித்தார்.
இதுபற்றி அவரது மனைவி கூறும்போது, ‘‘இந்த விஷயம் குறித்து எதுவும் பேச விரும்பவில்லை’’ என்று தெரிவித்தார்.
இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியலுக்காக மனைவியை பிரிவதாக ராய் சவுத்ரி அறிவித்து இருப்பது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்…அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு வழக்கு: 38 பேருக்கு தூக்கு தண்டனை