திருப்பதி: திருப்பதி ஏழுமலையானுக்கு சென்னை பக்தர் ரூ.9.2 கோடி நன்கொடை வழங்கி உள்ளார்.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் டாக்டர் ஆர். பர்வதம் (76). திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தரான இவர், தனக்குச் சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள 2 வீடுகள் மற்றும் வங்கியில் டெபாசிட் செய்திருந்த ரூ.3.2 கோடி பணத்தை ஏழுமலையானுக்கு சேர வேண்டுமென உயில் எழுதி வைத்திருந்தார்.
தற்போது பர்வதம் காலமானதையடுத்து, சென்னை காரப்பாக்கத்தில் வசித்து வரும் அவரது சகோதரி ரேவதி மற்றும் அவரது கணவர் விஸ்வநாதம் மற்றும் வி. கிருஷ்ணன் ஆகியோர் நேற்று திருமலைக்கு வந்தனர். பின்னர், கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டியிடம், குழந்தைகள் நல சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுவதற்கு பிராண தான அறக்கட்டளைக்கு ரூ.3.2 கோடியை நன்கொடையாக வழங்கினர். மேலும், சென்னையில் உள்ள ரூ. 6 கோடி மதிப்புள்ள 2வீட்டு பத்திரத்தையும் வழங்கினர்.
இதுகுறித்து ரேவதி கூறும்போது, ‘‘ஏழுமலையானின் தீவிர பக்தையான எனது சகோதரி பர்வதம், தான் சம்பாதித்த அனைத்துசொத்துகளையும் ஏழுமலையானுக்கு தானமாக வழங்கி விட்டார். ஏற்கெனவே அவர் உயிரோடு இருக்கும்போதும் தேவஸ்தான சிம்ஸ் மருத்துவமனைக்கு காணிக்கைகளை வழங்கி உள்ளார்’’ என்றார்.