பள்ளியிலிருந்து குழந்தையை அழைத்து வரும்போதுதான் டேனியல்லா தோர்ன்டனுக்கு, தடுப்பூசி செலுத்தாத காரணத்தால் தனது 9 வருட வேலையை இழந்துவிட்ட தகவல் தெரியவந்துள்ளது.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் கடந்த வருடம் பதவியேற்றத்திலிருந்து கரோனாவை ஒழிப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாகத்தான் அங்கு பணியிடங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்வது தொடர்ந்து அரசால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பின்னணியில்தான் தற்போது டேனியல்லா 9 வருடங்களாக சிட்டி க்ரூப் வங்கியில் பார்த்த வேலையை இழந்திருக்கிறார். ஆனால், இந்த முடிவை தான் எதிர்பார்த்தாகவும், இது தொடர்பாக பலமுறை கணவருடன் ஆலோசனை செய்ததாகவும் கூறும் டேனியல்லா, இறுதியில் தனது தனிப்பட்ட சுதந்திரமே முக்கியம் என்கிறார்.
டேனியல்லா வேலை செய்யும் சிட்டி க்ரூப்பில் 99% பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். டேனியல்லா மட்டுமல்ல, அமெரிக்காவில் ஆயிரக்கணக்கானவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தால் தங்களது வேலையை இழந்திருக்கிறார்கள்.
தடுப்பூசி கட்டாயம் என்று அரசு வலியுறுத்தும்போது, தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 25% அமெரிக்கர்கள் எதாவது ஒருவிதத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள் என்று மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும், தடுப்பூசியே கரோனாவுக்கு எதிரான ஆயுதம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், தடுப்பூசியை மறுக்கும் மக்கள் தங்களது தனிப்பட்ட சுதந்திரமே எல்லாவற்றைவிட பெரியது என்ற வாதத்தை முன்வைக்கின்றனர்.
இந்த நிலையில், நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும் என்று கூறும் ஜோ பைடனின் ஆணைகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரவேற்றுள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் கூறும்போது, “அரசின் முடிவை ஆதரிக்காத உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து நாங்கள் பெருமை கொள்கிறோம். அரசின் முடிவை அனுமதித்திருந்தால் அது பொருளாதாரத்தை மேலும் அழித்திருக்கும்” என்று கூறினார்.
கரோனா உலக அளவில் பரவ ஆரம்பித்து இரு வருடங்களுக்கு கடந்து விட்டது. காமா, டெல்டா, ஒமைக்ரான் போன்று கரோனா வேற்றுருக்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. கரோனாவுக்கு தடுப்பூசியே தீர்வு என்று மருத்துவ நிபுணர்கள் வலுவாக முன்வைக்கும் நிலையில் தடுப்பூசியா, தனிமனித சுதந்திரமா? போன்ற விவாதங்கள் அமெரிக்காவில் தொடர்வது முக்கிய பார்வையாகவே பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் நேற்று மட்டும் 1,97,374 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 574 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை அமெரிக்காவில் 7.1 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 63% பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 25.4% பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.