புதுடெல்லி:
என்.எஸ்.இ. என்று அழைக்கப்படும் தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா, தனது பதவிக்காலத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. தேசிய பங்குச்சந்தையில் நியமனம், பதவி உயர்வு, சம்பள உயர்வு, பதவி இடமாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் விதிமீறலில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.
இதுகுறித்து தேசிய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி நடத்திய விசாரணையில் சித்ரா ராமகிருஷ்ணா விதிமுறை மீறலில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து அவருக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரவி நரேன், சிஓஓ ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோருக்கும் தலா ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
சித்ரா ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள். மும்பையில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் அவருக்கு சொந்தமான 2 வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இந்நிலையில், சித்ரா ராமகிருஷ்ணாவிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்திவருகின்றனர். ராமகிருஷ்ணா, மற்றொரு முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரவி நரேன் மற்றும் முன்னாள் சிஓஓ ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதற்காக அவர்களுக்கு எதிராக சிபிஐ லுக் அவுட் நோட்டீசும் அனுப்பி உள்ளது.
நீண்டகாலமாக இமய மலையில் வசிக்கும் சாமியார் ஒருவரது ஆலோசனையின் பேரில் சித்ரா ராமகிருஷ்ணா செயல்பட்டதாக கூறப்படுகிறது. சாமியாரின் அறிவுரை, கட்டளைபடிதான் தேசிய பங்குச்சந்தையை அவர் நடத்தியுள்ளதாக தெரிகிறது.
பங்குச் சந்தையை முன்கூட்டியே அணுகுவதன் மூலம் லாபம் ஈட்டுவதற்காக பங்குச்சந்தை இணை இருப்பிட வசதியை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக, டெல்லியை மையமாகக் கொண்ட ஓபிஜி செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடெட்டின் உரிமையாளர் மற்றும் விளம்பரதாரர் சஞ்சய் குப்தா உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், செபி மற்றும் மும்பையில் உள்ள தேசிய பங்குச்சந்தை அலுவலக அதிகாரிகள் மற்றும் சிலரிடம் விசாரணை நடத்தியது.