தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ படத்தின் ஷுட்டிங் ஊட்டியில் மும்முரமாக நடந்து வருகிறது. ‘மயக்கம் என்ன’ படத்திற்குப் பிறகு இப்போதுதான் அண்ணனின் இயக்கத்தில் நடிக்கிறார் தனுஷ். செல்வராகவனும் இப்போது ‘சாணிக் காயிதம்’, ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் நடிகராகவும் களம் இறங்கிவிட்டார்.
செல்வராகவன் இயக்குநராக ஹிட் கொடுக்கும் கட்டாயத்தில் உள்ளார். இதற்கு முன்பு அவர் இயக்கிய ‘இரண்டாம் உலகம்’, ‘என்.ஜி.கே.’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என எதுவும் வசூலை குவிக்கவில்லை என்பதால் செல்வா- தனுஷ் எப்போது இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த சூழலில் தான் அண்ணனுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் தனுஷ். ‘நானே வருவேனி’ல் தனுஷ் டபுள் ஆக்ஷன் என்பதை அவர்களே சொல்லிவிட்டார்கள். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இதற்கு அடுத்த கட்ட ஷெட்யூல் இப்போது ஊட்டியில் நடந்து வருகிறது. ‘வாத்தி’ படப்பிடிப்பின் பிரேக்கிற்கு நடுநடுவே இதற்கான கால்ஷீட்களை தனுஷ் கொடுத்திருக்கிறார். ஊட்டி ஷெட்யூலோடு மொத்த படப்பிடிப்பும் நிறைவடைகிறது.
தனுஷுடன் படம் முழுவதும் யோகிபாபு வருகிறார். படத்தின் கதாநாயகியாக ‘மேயாத மான்’ இந்துஜா நடித்து வருகிறார். படத்தில் ஹீரோயினுக்கு வெயிட்டான ரோல் என்கிறார்கள். ஊட்டி படப்பிடிப்பில் இருக்கும் அப்பா தனுஷை பார்க்க யாத்ரா விரும்ப, உடனே அவரை ஊட்டிக்கு வரச் சொல்லிவிட்டார் தனுஷ். சென்ற வாரம் ஊட்டி சென்ற யாத்ரா, இன்னமும் அப்பாவுடன் தான் நேரம் செலவிட்டு வருகிறார். இதற்கிடையே ஊட்டியின் புகழ்பெற்ற மிலிட்டரி ஹோட்டலில் மதிய உணவு சாப்பிட்டும் மகிழ்ந்துள்ளார்.
படத்திற்கு யுவன் இசையமைத்து வருகிறார். முழுப்பாடல்களையும் அவர் கொடுத்து முடித்துவிட்டார். படத்திற்கு ஒளிப்பதிவாளராக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் அர்விந்த் கிருஷ்ணா. திடீரென படத்திலிருந்து அவர் விலகிக் கொள்ள, அடுத்து ‘சாணிக் காயிதம்’ யாமினி ஒளிப்பதிவு செய்து வந்தார். இப்போது ஊட்டி போர்ஷனை ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துவருகிறார். இந்தப் படத்தில் செல்வராகவன் முக்கிய கேரக்டரில் நடிப்பதாக வரும் தகவல்களை படக்குழுவினர் வட்டாரத்தில் மறுத்துள்ளனர்.