புதுடெல்லி: “மக்களுக்காக பள்ளிக்கூடங்களையும், மருத்துவமனைகளையும் கட்டும் நான் ஓர் இனிமையான தீவிரவாதி” என்று ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்திலுள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக வருகின்ற பிப்ரவரி 20-ம் தேதி நடைபெறவுள்ளது. அங்கு கடைசிக்கட்டப் பிரச்சாரங்கள் அனல் பறக்கின்றன. இந்நிலையில், “ஆம் ஆத்மியின் மிகப்பெரியத் தலைவரை தீவிரவாதிகளின் வீடுகளில் காணலாம்” என அரவிந்த் கேஜ்ரிவாலை மறைமுகமாகச் சாடியிருந்தார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி. இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய குமார் விஸ்வாஸும் இதே கருத்தைக் கூறியிருந்தார். பிரதமர் மோடியும் இதே பாணியில் காட்டமாக விமர்சித்திருந்தார்.
“கேஜ்ரிவாலைப் போன்றோர் பஞ்சாபை பிரிக்கும் கனவை சுமந்து திரிகின்றனர், ஆட்சிக்காக அவர்கள் பிரிவினைவாதிகளுடன் கைகோக்கின்றனர். அவர்களுக்கும் பாகிஸ்தானுக்கு ஒரே சிந்தனை தான்” என்று பிரதமர் மோடி விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் அரவிந்த் கேஜ்ரிவால் இவற்றிற்கு எல்லாம் பதிலளித்துள்ளார். ”நான் மிகவும் இனிமையான தீவிரவாதி. மக்களுக்காக நான் மருத்துவமனைகளையும், பள்ளிகளையும் கட்டி வரும் தீவிரவாதி. பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் இதனை 10 ஆண்டுகளாக சொல்லி வருகின்றனர். கேஜ்ரிவால் தேசத்தை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதிக்கு பிரதமராக கனவு காண்கிறார் என்று கூறுகின்றனர். இது ஒரு நல்ல நகைச்சுவை. இதனைக் கேட்டு எல்லோரும் சிரிக்கத்தான் வேண்டும்.
நான் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக இருக்கிறேன் என்று அவருக்குத் தெரிந்திருந்தால், அவர் ஏன் அதை நிரூபிக்கக் கூடாது. என் மீது விசாரணை நடத்தியிருக்கலாமே? நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் என்ன செய்கின்றன?
பஞ்சாபை பொறுத்தவரையில் அகாலிதளம், பாஜக, காங்கிரஸ் எல்லாம் ஓரணியில் திரண்டுவிட்டன. ஊழல் என்ற புள்ளியில் அவர்கள் ஓரணியில் உள்ளனர். பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, நரேந்திர மோடி, சுக்பீர் பாதல், சரண்ஜித் சிங் சன்னி, கேப்டன் அமரீந்தர் எனப் பலரும் ஒன்றிணைந்துள்ளனர். பகவந்த் மான் என்ற எங்களின் வேட்பாளரை, நேர்மையான மனிதரை தோற்கடிக்கச் செய்ய அவர்கள் ஒன்றிணைந்துள்ளனர்” என்று கேஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார்.