சண்டிகர்:
117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக நாளை மறுநாள் (20-ந்தேதி) தேர்தல் நடக்கிறது. பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் முதலில் அறிவித்தது. ஆனால் பிப்ரவரி 16-ல் குரு ரவீந்திரதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு பங்கேற்க பஞ்சாபிலிருந்து வாரணாசிக்கு ஏராளமானோர் செல்வார்கள் என்பதால் தேர்தல் தேதியை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. எனவே, தேர்தல் தேதி பிப்ரவரி 20ம் தேதிக்கு மாற்றப்பட்டது.
இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, பாஜக, சிரோமணி அகாலி தளம் என பலமுனை போட்டி உள்ளது. கடந்த சில தினங்களாக தலைவர்கள் அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சி நேற்று முன்தினம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு நிதியுதவி, ஒரு லட்சம் அரசு வேலைகள், மது விற்பனை மற்றும் மணல் விற்பனைக்கான வாரியங்கள் உருவாக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான் மற்றும் சிரோமணி அகாலிதளம் தலைவர் பிக்ரம் சிங் மஜிதியா ஆகியோர் முறையே படாவூர், ஜலாலாபாத், ராய்கோட் மற்றும் அமிர்தசரஸ் ஆகிய இடங்களில் ரோட்ஷோ நடத்தினர்.
முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் பாட்டியாலாவில் ரோடு ஷோ நடத்தினர். அமரீந்தர் சிங்கின் மனைவியும், காங்கிரஸ் எம்பியுமான பிரனீத் கவுரும் ரோட் ஷோவில் பங்கேற்றார். முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் ஆகியோரும் கடைசி நாளான இன்று பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் 9 பெண்கள் உள்பட 1304 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.