புதுடெல்லி: கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடியும் அந்த மாநிலங்களில் பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் பேசும்போது, ‘பிரிட்டிஷ் கொள்கையின் அடிப்படையில் போலி தேசியவாதியை பாஜ நம்புகிறது. இந்தியாவில் பணக்காரர்கள் பணக்காரர்கள் ஆகி கொண்டே இருக்கிறார்கள், ஏழைகள் ஏழைகளாக ஆகி கொண்டே இருக்கிறார்கள். பாஜவின் பிரித்தாலும் கொள்கையால் அரசியலமைப்பு பலவீனமடைந்துள்ளது. பாஜக 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் உள்ள நிலையில் இன்னும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவையே குற்றம் சாட்டுகிறது. பிரதமர் பதவிக்கு என ஒரு குறிப்பிட்ட கௌரவம் உண்டு. நான் 10 ஆண்டு காலம் பிரதமராக இருந்தபோது எனது பணிகளின் மூலம் பேசியதாகவும், உலகத்தின் முன் தேசத்தின் கவுரவத்தை இழக்க நான் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. இந்தியாவின் பெருமையை நான் ஒருபோதும் குறைக்கவில்லை. அரசியல் லாபத்துக்காக உண்மையை மறைத்து காங்கிரஸ் கட்சி ஒருபோதும் நாட்டை பிடிக்கவில்லை’ என்றார்.இதற்கு பதிலடி கொடுத்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது ஆட்சி காலத்தில் மன்மோகன் சிங், இந்தியாவை 5வது நிலைக்கு கொண்டு வந்ததாகவும் பணவீக்கத்தை அதிகரித்ததாகவும் கூறியுள்ளார். மேலும் உங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இதை நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் பாஜவுக்கு வாக்களிக்க பரிசீலனை செய்து வருவதன் காரணமாக திடீரென்று மன்மோகன் சிங் பொருளாதாரத்தை பற்றி பேசுகிறாரா என்று தோன்றுகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஜிடிபி 5 சதவீதத்திற்கும் கீழ் குறைந்தது, பணவீக்கம் அதிகரித்தது. தேசிய பங்குச் சந்தையில் முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணா நாட்டின் மிகப்பெரிய பங்கு சந்தையை நடத்துவதில் சாமியார் ஒருவரின் வழிகாட்டுதல் பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்தபோது இவ்வளவு காலம் பங்குச் சந்தை எப்படி நடத்தப்பட்டது என்பது கூட அவருக்கு தெரியாது என்றார்.