ரியோ டி ஜெனிரோ: தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 94 பேர் உயிரிழந்தனர். மேலும் பலரை காணவில்லை.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ மாநிலத்தில் பெட்ரோபோலிஸ் என்ற மலைப்பிரதேசம் உள்ளது. இங்கு கடந்த செவ்வாய்க்கிழமையன்று 3 மணி நேரத்தில்25.8 செ.மீ. அளவுக்கு கனமழைகொட்டித்தீர்த்தது. இது முந்தைய30 நாட்களில் அங்கு பெய்த மொத்த மழையின் அளவாகும். மேலும் 1932-ம் ஆண்டுக்குப் பிறகு மிக மோசமான மழை இதுவெனக் கூறப்படுகிறது.
இதனால் அங்குள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேலும் பெட்ரோபோலிஸ் நகரின்அனைத்து சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் பல வீடுகளும் வாகனங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் கடும் நிலச்சரிவும் ஏற்பட்டு கட்டிடங்கள் புதையுண்டன. வெள்ளத்தின் சீற்றம் சற்று தணிந்த பிறகு அங்கு போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் தொடங்கின.
பாதுகாப்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்களுடன் தன்னார்வலர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மோப்ப நாய்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இந்நிலையில் பெட்ரோபோலிஸ் பகுதியில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு சம்பவங்களில் இதுவரை 94 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலரைக் காணவில்லை.அவர்களைத் தேடும் பணி தொடர்கிறது. இதனால் உயிரிழப்பு மேலும்உயரும் என அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து ரியோ டி ஜெனிரோ ஆளுநர் கிளாடியோ காஸ்ட்ரோ கூறும்போது, “இந்த அளவுக்கு கடுமையான மழையை யாரும் எதிர்பார்க்கவில்லை. இதில் 400 பேர் வீடுகளை இழந்துள்ளனர். 24 பேரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது” என்றார்.
பிரேசில் அதிபர் போல்சனரோ அரசுமுறைப் பயணமாக ரஷ்யா சென்றிருந்த வேளையில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அமைச்சர்களிடம் அதிபர் போல்சனரோ, ரஷ்யாவில் இருந்தவாறு கேட்டுக்கொண்டார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தென்கிழக்கு பிரேசிலில் கனமழை பெய்து வருகிறது. கடந்த ஜனவரியில் அடுத்தடுத்த கனமழைச் சம்பவங்களில் மினாஸ் கெரைஸ் மாகாணத்தில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.