உத்தரப்பிரதேசத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பட்டியலினத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் காதலித்திருக்கிறார். இவர்களின் காதலுக்கு இருதரப்பு வீட்டாரிடமிருந்தும் பெரும் எதிர்ப்பு கிளம்பவே, இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். மேலும் கடந்த 2 ஆண்டுகளாக ஒன்றாக குடும்பம் நடத்தி வந்திருக்கின்றனர்.
இந்த நிலையில், திருமணத்தின் போது சிறுவனாக இருந்தவர் தற்போது இளைஞராகியுள்ளார். இன்னும் அந்த சிறுமி 18 வயதை அடையவில்லை என்பதால், சிறுமியை திருமணம் செய்துள்ளார் என இவரின் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கிலிருந்து அந்த இளைஞருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அலகாபாத் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி ராகுல் சதுர்வேதி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, “இந்த போக்சோ சட்டத்தின் நோக்கம் மற்றும் உள்பொருள் புரிந்துகொள்ளப்படாமல், காதலிக்கும் சிறார்கள் மற்றும் இளைஞர்கள் இந்த சட்டத்தில் கைதாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குழந்தைகளைக் காக்க இருக்கும் சட்டத்தின் தண்டனை பிரிவை மட்டும் அடிப்படையாக வைத்து வழக்கு பதிவு செய்யப்படுவது வருத்தமளிக்கிறது” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.