முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே. வாசன் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கேரள ஆளுநர் அவர்கள் முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் உரையாற்றியிருப்பது ஏற்புடையதல்ல. இது கண்டிக்கத்தக்கது என்றும், மத்திய, மாநில அரசுகள் முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் விவசாயத்திற்கும் மற்றும் மக்களின் குடிநீர் தேவைக்கும் முல்லைப் பெரியாறு அணையின் தண்ணீர் மிகவும் இன்றியமையாதது என்றும்,
குறிப்பாக கேரள அரசு முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் அனுமதி பெற வேண்டியது கட்டாயம் எனவும் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
அதற்கு, காரணம் அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் தமிழக அரசுக்கும் பங்குண்டு எனவும்,
ஏற்கனவே உச்சநீதிமன்றம் முல்லைப்பெரியாறு அணை வலிமையாக இருப்பதாகவும், புதிய அணை கட்ட தேவையில்லை என்றும் கூறியிருக்கிறது என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கேரள அரசு முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் புதிய அணை கட்ட தன்னிச்சையாக முடிவு எடுப்பது நியாயமில்லை எனவும்,
கேரள சட்டமன்றத்தில் ஆளுநர் அவர்கள் முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டப்படும் என்று உரையாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழக அரசு இரு மாநில நட்புறவு மேம்பட வேண்டும் என்பதை கேரள அரசுக்கு அழுத்தத்தோடு தெரிவிக்க வேண்டும் எனவும், இரு மாநில மக்கள் நலன் கருதி தமிழகத்தின் உரிமையான முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டக்கூடாது என்பதை உறுதியோடு தெரிவிக்க வேண்டும் எனவும்,
மத்திய அரசும், முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் அனுமதி பெறாமல் கேரள அரசு தொடர்ந்து வீண்பிடிவாதப் போக்கை கடைப்பிடிப்பதை நிறுத்திக்கொள்ள வற்புறுத்த வேண்டும் என்றும் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
எனவே மத்திய, மாநில அரசுகள் முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.