திருவனந்தபுரம்: ” கேரள மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும் திட்டத்தை மாநில அரசு முன்வைத்துள்ளது ” என சட்டசபையில் அம்மாநில கவர்னர் ஆரிப்கான் தெரிவித்துள்ளார். இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் பெரியாற்றின் குறுக்கே அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. இதன் பராமரிப்பை, தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது. ஆனால் முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும் என கேரள அரசு வலியுறுத்தி வருகிறது. இதனை தமிழகம் ஏற்கவில்லை. அணையில் 142 அடி நீர் தேக்கி கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனை மறு ஆய்வு செய்யக்கோரி கேரளா மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், கேரள சட்டசபையில் கவர்னர் ஆரிப் கான் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
முல்லை
பெரியாறில்
புதிய அணை
கேரள கவர்னர்
பேச்சு
கேரள மக்களின் பாதுகாப்பு தான் மிகவும் முக்கியம் என்பது மாநில அரசின் பெரும் கவலையாகும். இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணையில் இருந்து அண்டை மாநிலமான தமிழகத்திற்கு தேவையான நீரை பகிர்ந்து கொள்கிறோம். அதேநேரத்தில், கேரள மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தக்கூடாது. தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்காக நீரை பகிர்ந்து கொள்வதில் உறுதியாக உள்ளது. அதேநேரத்தில் 125 ஆண்டுகள் பழமையான தற்போதைய முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட வேண்டும் என கேரள அரசு விரும்புகிறது. இவ்வாறு கவர்னர் தனது உரையில் தெரிவித்தார்.
காங்., போராட்டம்
கேரளாவில் ஆளுங்கட்சியின் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு கவர்னர் உடந்தையாக உள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. மேலும் சட்டசபையில் கவர்னர் உரையாற்ற வந்த போது அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கவர்னருக்கு எதிராக பதாகை ஏந்தி போராட்டம் நடத்தியதுடன் கோஷம் எழுப்பினர். பின்னர் கவர்னர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது
இது தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கேரள சட்டசபையில், அம்மாநில கவர்னர் உரையில், கேரள அரசு முல்லை பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டப்படும் என தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு முரணானது. மேலும், இது நீதிமன்றத்தின் உத்தரவை அவமதிப்பதாகும். உச்சநீதிமன்றத்தின் ஆணையில் முல்லை பெரியாறு அணை எல்லா விதத்திலும் உறுதியாக உள்ளதாக அறுதியிட்டு கூறப்பட்டு உள்ளது. புதிய அணை தேவையில்லை. மேலும் புதிய அணை கட்டும் திட்டத்தை தமிழக அரசிடம் கேரள அரசு திணிக்க முடியாது என்றும் தெளிவாக கூறியுள்ளது. இப்படியிருக்க கேரள அரசு தன்னிச்சையாக புதிய அணை கட்டும் திட்டத்தை அறிவித்துள்ளதை ஏற்று கொள்ள முடியாது. இதை எல்லாவிதத்திலும் தமிழக அரசு எதிர்க்கும். தமிழகத்தின் உரிமையை எக்காரணம் கொண்டும் விட்டு கொடுக்காது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
Advertisement