மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது T20 போட்டியில் இந்திய அணி வெற்றி

கொல்கத்தா:
மேற்கு இந்திய தீவு அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகித்த நிலையில், 2வது டி20 போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன், 10 பந்தில் 2 ரன் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ரோஹித்தும் கோலியும் இணைந்து அடித்து ஆடிவந்த நிலையில், ரோஹித் 19 ரன்னில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னரும் அதிரடியை தொடர்ந்த கோலி அரைசதம் அடித்தார். 41 பந்தில் 52 ரன்கள் அடித்து கோலி ஆட்டமிழந்தார். 106 ரன்களுக்கு இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் ரிஷப் பண்ட்டும் வெங்கடேஷ் ஐயரும் இணைந்து அடித்து ஆடினர். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர்.

இருவரும் இணைந்து கடைசி 6 ஓவரில் 76 ரன்களை குவித்தனர். வெங்கடேஷ் ஐயர் 18 பந்தில் 33 ரன்களும், ரிஷப் பண்ட் 28 பந்தில் 52 ரன்களும் அடித்தனர். 20 ஓவரில் 186 ரன்களை குவித்த இந்திய அணி, 187 ரன்கள் என்ற கடின இலக்கை வெஸ்ட் இண்டீஸுக்கு நிர்ணயித்தது.

187 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸின் தொடக்க வீரர்கள் இருவருமே சோபிக்கவில்லை. கைல் மேயர்ஸ் 10 பந்தில் 9 ரன்னுக்கும், பிரண்டன் கிங் 30 பந்தில் 22 ரன்னுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர். 8.3 ஓவரில் 59 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோவ்மன் பவல் மற்றும் நிகோலஸ் பூரன் ஆகிய இருவரும் இணைந்து அடித்து ஆடி ஸ்கோர் செய்தனர். இருவரும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 100 ரன்களை குவித்தனர்.

இருவருமே அரைசதம் அடித்த நிலையில், நிகோலஸ் பூரன் 41 பந்தில் 62 ரன்கள் அடித்து 19வது ஓவரில் புவனேஷ்வர் குமாரின் பந்தில் ஆட்டமிழந்தார். பவலும் அரைசதம் அடித்திருந்த நிலையில், கடைசி ஓவரில் வெஸ்ட் இண்டீஸின் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட, ஹர்ஷல் படேல் வீசிய அந்த ஓவரின் முதல் 2 பந்தில் 2 சிங்கிள் மட்டுமே எடுக்கப்பட்டன. கடைசி 4 பந்தில் 23 ரன்கள் தேவைப்பட, 4 சிக்ஸர்கள் அடித்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலை உருவானது. 3 மற்றும் 4வது பந்துகளை அடுத்தடுத்து சிக்ஸருக்கு விளாசி அச்சுறுத்தினார் பவல். ஆனால் 5வது பந்தை சாமர்த்தியமாக வீசினார் ஹர்ஷல் படேல். அந்த பந்தில் சிங்கிள் மட்டுமே கிடைக்க, கடைசி பந்தில் பொல்லார்டு ஒரு சிங்கிள் அடிக்க, 20 ஓவரில் 178 ரன்கள் அடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 8 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

2வது டி20 போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, 2-0 என டி20 தொடரையும் வென்றது. ஒருநாள் தொடரை 3-0 என ஒயிட்வாஷ் செய்து வென்ற இந்திய அணி, டி20 தொடரையும் வென்றுள்ளது. இந்த டி20 வெற்றி, இந்திய அணியின் 100வது சர்வதேச டி20 வெற்றி ஆகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.