மறைந்த முன்னாள் வட கொரியத் தலைவர் கிம் ஜாங் இல்-ன் 80-வது பிறந்தநாள் கொண்டாட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை, சாம்ஜியோன் நகரில் நடைபெற்றது. கோலாகலமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்களை உறையவைக்கும் கடும் குளிரில் நிற்கவைத்து அவருடைய தந்தையின் புகழ் பற்றிப் பேசியிருக்கிறார். கிம் தனது குடும்பத்தைப் பற்றி சுமார் 30 நிமிடங்கள் வரை அந்த நிகழ்ச்சியில் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் குளிர் `மைனஸ் 15 டிகிரி செல்சியஸ்’ என்று கூறப்படுகிறது. நிகழ்ச்சி மேடையிலிருந்த அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அவர் நண்பர்கள் சிலருக்கு மட்டும் ரகசிய ஹீட்டர்கள் அமைக்கப்பட்டதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஹீட்டர்களுக்கு மத்தியில் மேடையில் விரிக்கப்பட்டிருந்த சிவப்பு கம்பளத்திற்குக் கீழ்ப் பகுதியில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. கிம் ஜாங் இல் வடகொரியா நாட்டின் முன்னாள் தலைவர் என்பதால், அந்த நாளில் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக அவருக்கு மரியாதை செலுத்த வந்திருந்தனர். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் குளிரில் நின்று கொண்டிருந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.