முனீச்: ரஷ்ய-உக்ரைன் போர் மூண்டால் உலக நாடுகள் கடும் விளைவுகளை சந்திக்கவேண்டி இருக்கும் என ஐநா தலைவர் அண்டோனியோ கட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபைத் தலைவர் அண்டோனியோ கட்டர்ஸ் முனீச் பாதுகாப்பு கூட்டத்தில் இன்று கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் ரஷ்யா சார்பாக யாரும் கலந்து கொள்ளாத நிலையில் ரஷ்ய-உக்ரைன் எல்லை போர் மிகவும் ஆபத்தானது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
ரஷ்யா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளின் எல்லையில் தற்போது பதற்றம் நீடித்து வருகிறது. முன்னாள் சோவியத் நாடான உக்ரைன், சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து தனி நாடாக உருவெடுத்தது.
ஆனால் உக்ரைன் ரஷ்யாவுடன் கலாசாரம், மொழி ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டது. ரஷ்ய விளாடிமிர் புடின் அரசு உக்ரைன் நாட்டைத் தனதாக்கிக்கொள்ள தீவிர முயற்சி மேற்கொண்டு உள்ளார்.
ரஷ்யாவுடன் தற்போது இணைய மறுத்துள்ள உக்ரைன், நேட்டோ நாடுகளுடன் இணைய விரும்புகிறது. ஆனால் நேட்டோ அமைப்பு உக்ரைனுக்கு நேரடியாக உதவத் தயாராக இல்லை. இதனை அடுத்து இரு நாட்டு எல்லைகளின் மத்தியிலும் ராணுவம் குவிக்கப்பட்டது.
எந்நேரமும் போர் வெடிக்கலாம் என்கிற சூழல் ஏற்பட்ட நிலையில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்கள் விமான போக்குவரத்தை குறைத்துக் கொண்டன. இந்நிலையில் தற்போது நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்திருப்பதை அடுத்து முனீச் பாதுகாப்பு கூட்டத்தில் இதுகுறித்துப் பேசிய ஐநா., தலைவர் அன்டோனியோ கட்டர்ஸ் எதிர்காலத்தில் ரஷ்ய உக்ரைன் போர் துவங்கினால் இது உலக நாடுகளுக்கு மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றார்.
Advertisement