அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் லீ மெரிடியன் ஹோட்டலை, எம்.ஜி.எம் ஹெல்த்கேர் நிறுவனம் கையகப்படுத்தும் திட்டத்தை ரத்து செய்து தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய சுற்றுலாக் கழகத்திற்கு தொழிலதிபர் பழனி பெரியசாமியின் அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம் 18 கோடி ரூபாயை செலுத்தாததால் வாராக்கடனாக அறிவிக்கப்பட்டதுடன், திவால் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், அந்நிறுவனத்தை வாங்க எம்.ஜி.எம் ஹெல்த்கேர் குழுமம் சமர்ப்பித்த 423 கோடி ரூபாய் மதிப்புள்ள கையகப்படுத்தும் திட்டத்திற்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் சென்னை கிளை ஒப்புதல் அளித்தது.
ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை, 423 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுப்பது நியாயமில்லை எனக்கூறி அப்பு ஹோட்டல்ஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.
இதனை விசாரித்த மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் வேணுகோபால்,வி.பி.சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, பழனி பெரியசாமி தரப்பு வாதங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டதுடன், லீ மெரிடியன் ஹோட்டலை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் நிறுவனம் வாங்கும் திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கடனை திருப்பி செலுத்த பழனிபெரியசாமி தரப்பு அளித்த திட்டத்தை வங்கிகளின் கடன் குழுமம் பரீசிலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.