பிரபல லீ மெரிடியன் ஹோட்டல் வாராக்கடன் காரணமாக திவால் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனத்துக்கு விற்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. லீ மெரிடியன் ஹோட்டலை கையகப்படுத்தும் திட்டத்துக்கு எதிராக மேல்முறையீடு செய்த அப்பு ஹோட்டல்ஸ் அதில் வெற்றி பெற்றுள்ளது.
சென்னை கிண்டி, கோவை ஆகிய இடங்களில் லீ மெரிடியன் ஹோட்டலை நடத்திவரும் அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம் தொழிலதிபர் பழனி ஜி பெரியசாமிக்கு சொந்தமானதாகும்.
இந்த அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம் இந்திய சுற்றுலா நிதிக் கழகத்துக்கு கொடுக்க வேண்டிய சுமார் ரூ.18 கோடியைச் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருக்கிறது. இந்தத் தொகையைச் செலுத்த போதிய கால அவகாசம் வழங்கியும் நிலுவைத் தொகையை வழங்காத காரணத்தால், 2019-ம் ஆண்டு செப்டம்பரில் வாராக்கடனாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகும், கொரோனா பரவல் பிரச்னையைக் காரணம் காட்டி, அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம் நிலுவைத் தொகையை செலுத்த முடியவில்லை எனக் கூறியது. இதையடுத்து இந்திய சுற்றுலா நிதிக் கழகம் திவால் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
கடன்களை அடைப்பதற்காக அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் சொத்துகளை விற்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக சில நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் எம்.ஜி.எம் ஹெல்த்கேர் குழுமத் தலைவர் எம்.கே.ராஜகோபாலன் சமர்ப்பித்த ரூ.423 கோடி மதிப்புள்ள கையகப்படுத்தும் திட்டத்துக்கு தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தின் சென்னைக் கிளை ஒப்புதல் அளித்துள்ளது.
ஆனால், லீ மெரிடியன் ஹோட்டல்களின் மொத்த மதிப்பு ரூ.1,600 கோடி அளவில் இருக்கும் நிலையில், மிகவும் குறைந்த மதிப்பில் ஏலத்துக்கு விற்பது நியாயமில்லை என்று தனது வாதத்தை முன்வைத்தது. இதனால் ரூ.423 கோடிக்கு கையகப்படுத்தும் திட்டத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்தது.
இந்த மேல் முறையீட்டை விசாரித்த தேசிய நிறுவனங்கள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் மனுவை ஏற்று லீ மெரிடியன் ஹோட்டல்களைக் கையகப்படுத்தும் திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. நீதிபதி எம் வேணுகோபால், டெக்னிக்கல் உறுப்பினர் வி.பி.சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
லீ மெரிடியன் ஹோட்டலை கையகப்படுத்தி மருத்துவமனையாக மாற்ற எம்ஜிஎம் ஹெல்த்கேர் திட்டமிட்டிருந்த நிலையில் இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. இதன்மூலம் தொழிலதிபர் பழனி ஜி.பெரியசாமிக்கு மற்றுமொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.