இந்தியாவின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையங்களில் ஒன்றான பாவகடாவின் ஒப்பந்த நகல் ஆங்கிலத்திலிருந்து கன்னட மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் குறித்த புரிதலை இது விவசாயிகளுக்கு வழங்கும். மேலும் விவசாயிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒப்பந்தத் தொகையை உயர்த்துவது குறித்தும் கர்நாடக அரசு ஆலோசித்து வருவதாக சூரிய எரிசக்தி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2016-ம் ஆண்டில் கர்நாடக அரசானது, சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் அமைக்கத் திட்டமிட்டது. அதற்காகப் பாவகடா பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்குள்ள விவசாயிகளின் நிலங்களைக் குத்தகைக்கு எடுக்கவிருப்பதாகக் கூறியது. அதற்காக விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு, ஆண்டு குத்தகையாக 21,000 ரூபாய் என 25 ஆண்டுகளுக்கு வழங்க ஒப்பந்தத்தைப் போட்டுக்கொண்டது.
ஏற்கெனவே அப்பகுதிகளில் விவசாயிகள் அதிக வறட்சியைச் சந்தித்து வந்ததால், சிலர் நிலத்தின் குத்தகை விலையைக் கூட்டி பேரம் பேசினர். பலர் இது குறித்து அச்சம் கொண்டனர்.
இறுதியில், கர்நாடகா அரசு ஐந்து கிராமங்களில் உள்ள சுமார் 1,800 விவசாயிகளிடமிருந்து 13,000 ஏக்கரை குத்தகைக்கு எடுத்தது. அங்கு 11 நிறுவனங்கள் கூட்டாகச் சேர்ந்து கிட்டத்தட்ட 2,050 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.
இந்நிலையில், சூரிய மின் சக்தி நிலையத்தை (solar park) கிராம மக்களிடமிருந்து பிரிக்கும் முள்வேலி மற்றும் சுவர்கள் அவர்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிப்பதாக தெரிவிக்கின்றனர். அந்தத் தடுப்பு வேலிகளால் நிலத்தை சென்றடைய அதிக தூரம் செல்ல வேண்டியுள்ளது எனக் கிராம வாசிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
சோலார் பூங்காவில் இருக்கும் சாலைகள், வழிகள் அனைத்தும் பிரமாண்டமாய் உள்ள நிலையில், அங்குள்ள கிராம மக்கள் மின்சாரம், வடிகால் வசதி, குடிநீர் விநியோகம் போன்றவற்றுக்கு போராடி வருகின்றனர். தடுப்பு சுவர்களால் பள்ளி செல்லும் குழந்தைகளும் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது.
கிராமத்தை மேம்படுத்தவும், கிராம மக்களை அங்கு பணியில் அமர்த்தவும், ஒப்பந்தத் தொகையை அதிகமாக்கிடவும் கிராம மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்த நகலை கன்னட மொழியில் மாற்றியது, விவசாயக் குழுவின் வெற்றியாகக் கருதப்படுகிறது.
2030-க்குள் 500 ஜிகாவாட் என்ற `புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன்’ இலக்கை அடையும் வகையில், 14 மாநிலங்களில் இந்தியா அங்கீகரித்த, 52 சூரிய மின்சக்தி நிலையங்களில் பாவகடா சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையமும் ஒன்றாகும்.