பாகிஸ்தானி பாப் சிங்கர் ஹசான் ஜகாங்கீரின் ஹவா ஹவா என்ற இந்திப் பாடலின் மெட்டையும் பீட்டையும் சுட்டு அரபிக் குத்து பாடலை ஹிட்டாக்கியதாக விமர்சனத்துக்குள்ளாகி இருக்கும் இசையமைப்பாளர் அனிருத் , தனது குழுவினர் உடன் அரபிக்குத்து பாடலுக்கு விஜய் போல நடனம் ஆட முயன்றதாக வீடியோ ஒன்றை முக நூலில் பகிர்ந்துள்ளார்.
மெட்டையும், பீட்டையும் எங்கிருந்து எடுக்கிறோம் என்று சொல்லாமலே பாடல்களை ஹிட்டாக்குவதில் வல்லவர் அனிருத். அந்தவகையில் சமீபத்தில் அவர் இசையில் வெளியான பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து என்ற பாடல் யூடியூப்பில் 43 மில்லியன் பார்வைகளை கடந்து ஹிட் அடித்துள்ளது.
உருது, ஜிப்ரீஸ், தமிழ், மலையாளம் என பன்மொழிக் கலவையாக பாடல்வரிகள் ஒலித்தாலும் மொழிகளைக் கடந்து பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனை கொண்டாடும் விதமாக அனிருத் தனது சகாக்களுடன் அரபிக் குத்து பாடலுக்கு விஜய் போலவே நடனமாடி அதனை தனது முகநூலில் பகிர்ந்துள்ளார்
அதில், தான் 5 முறை முயன்றாலும் அவரை போல தன்னால் ஆட இயலவில்லை என்று அனிருத் பதிவிட்டிருந்தார். வேறொரு இசை அமைப்பாளரின் சிந்தையில் உதித்த மெட்டையும் பீட்டையும் சுட்ட அனியால் நடனத்தில் செய்ய இயலாதது சற்று வருத்தம் தான்..! என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
1987 ஆம் ஆண்டு கவிஞர் ரேகான் அஸ்மியின் பாடல் வரிகளுக்கு பாகிஸ்தானி பாப் இசை அமைப்பாளர் ஹசன் ஜகாங்கீர் இசையில் சர்வதேச அளவில் ஹிட் அடித்த ஹவா ஹவா என்ற இந்தி பாடலில் இருந்து பீட்டை உருவி உருவாக்கப்பட்டதுதான் அனிருத்தின் அரபிக் குத்து என்று இசை ரசிகர் ஒருவர் அம்பலப்படுத்தி உள்ளார்
ஹவா ஹவா பாடல் ஒன்றும் ஹசன் ஜகாங்கீரின் சிந்தையில் உதிக்கவில்லை என்றும் 1970 ஆம் ஆண்டு ஈரானிய இசை அமைப்பாளர் குரோஷ் யாக்மேயி கைவண்ணத்தில் வெளியான ஹவர் ஹவர் என்ற பெர்சிய மொழி பாடலின் மெருகேற்றப்பட்ட மெட்டுத்தான் அது என்று பூர்வீகத்தை சுட்டிக்காட்டுகிறார் மற்றொரு இசை ரசிகர்
திரைப்படங்களில் ஒரிஜினல் இசையை தேடினால், இளம் இசைத் தேனீக்களின் இசை வெள்ளத்தில் நீந்த இயலாது என்பது மற்றொரு தரப்பு ரசிகர்களின் கருத்தாக உள்ளது!