விஜயவாடா: கர்நாடக மாநிலத்தை தொடர்ந்து தற்போது ஆந்திராவிலும் ‘ஹிஜாப்’ விவகாரம் துளிர் விடத் தொடங்கி உள்ளது. ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கும் 2 இஸ்லாமிய மாணவிகள் நேற்று ஹிஜாப், புர்கா அணிந்து வகுப்புக்கு வந்தனர். அப்போது கல்லூரி முதல்வர் கிஷோர், அந்த பெண்களை அழைத்து, ”ஏன் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்தீர்கள்? வீட்டிற்கு சென்று, மாற்று உடை அணிந்து வாருங்கள்” என கூறினார். இதுகுறித்து அந்த 2 மாணவிகளும் தங்களது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் பெற்றோர்களும், இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சிலரும் கல்லூரிக்கு வந்து முதல்வர் கிஷோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் மாணவியர்கள் இருவரும் வகுப்புக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து லயோலா கல்லூரி முதல்வர் கிஷோர் கூறியதாவது: இந்த கல்லூரியின் நிபந்தனைகளை பின்பற்றி நடந்து கொள்வோம் என கல்லூரி அனுமதியின் போது கையொப்பம் இடுபவர்கள் மட்டுமே இங்கு படிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இதனை மீறி 2 மாணவிகள் ஹிஜாப், புர்கா அணிந்து கல்லூரிக்கு வந்ததால், அவர்களை மாற்று உடை அணிந்து வருமாறு கூறினேன். கல்லூரி அடையாள அட்டை கூட ஹிஜாப்புடன் தான் எடுத்துக் கொண்டுள்ளோம் ஆதலால் நாங்கள் அப்படி வருவதில் என்ன தவறு என அவர்களது தரப்பில் கேள்வி எழுப்பினர். ஆதலால், பேச்சு வார்த்தைக்கு பின்னர் மாணவிகளை வழக்கம் போல் வகுப்புகளுக்கு அனுப்பி வைத்தோம். ஹிஜாப் குறித்து கல்லூரி நிர்வாகம் வெள்ளிக்கிழமை (இன்று) அறிவிக்கும்.
இவ்வாறு கல்லூரி முதல்வர் கிஷோர் தெரிவித்துள்ளார்.