கர்நாடகத்தில் கல்லூரிக்குள் ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்பட்டதால் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டார் உதவிப் பேராசிரியை ஒருவர்.
கர்நாடகத்தில் சில கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால் பிரச்சினை வெடித்தது. மாணவ, மாணவியர் போராட்டங்களில் குதித்தனர். இதனால் கல்வி நிறுவன வளாகங்கள் போர்க்களமாகின.
இந்த நிலையில், தற்போது கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் தொடர்ந்து ஹிஜாப் விவகாரம் அனலடித்துக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த விவகாரம் தொடர்பாக ஒரு கல்லூரி விரிவுரையாளர் தனது பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அவரது பெயர் சாந்தினி. தும்கூரில் உள்ள ஜெயின் பியூசி கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். கடந்த 3 வருடமாக அவர் இங்கு வேலை பார்த்து வந்தார். இதுவரை இவர் ஹிஜாப் அணிய எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது அவருக்கு ஹிஜாப் அணிய கல்லூரி நிர்வாகம் தடை விதித்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 3 வருடமாக நான் ஹிஜாப் அணிந்துதான் கல்லூரியில் பணியாற்றி வந்தேன். எந்தப் பிரச்சினையும் இந்தக் காலகட்டத்தில் வந்ததில்லை. ஆனால் நேற்று பிரின்சிபால் என்னைக் கூப்பிட்டு நான் ஹிஜாபோ அல்லது வேறு மத அடையாளத்துடனோ வந்து பாடம் நடத்தக் கூடாது என்று கூறுகிறார். கடந்த 3 வருடமாக நான் ஹிஜாப் அணிந்துதான் பாடம் நடத்தி வந்தேன்.
இந்தப் புதிய உத்தரவு எனது சுய மரியாதையை பாதிப்பதாக உள்ளது. எனவே நான் ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளேன் என்றார்.
ஆனால் கல்லூரி முதல்வர் கே.டி. மஞ்சுநாத் இதை மறுத்துள்ளார். நானோ அல்லது வேறு யாருமோ ஹிஜாப் அணியக் கூடாது என்று அவரிடம் கூறவில்லை. ஹிஜாபை அகற்றுமாறும் நாங்கள் கூறவில்லை என்றார் அவர். ஹிஜாப் விவகாரத்தில் கல்லூரி ஆசிரியை ஒருவர் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.