சென்னை: தமிழகத்தில் கடலோர பகுதிகளில் உள்ள 11 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 18-ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக் கூடும்.
19, 20-ம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், 21-ம் தேதி கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான பனி மூட்டம் இருக்கும்.
17-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, சிவலோகம் ஆகிய இடங்களில் தலா6 செமீ, பெருஞ்சாணி அணை, புத்தன் அணை ஆகிய இடங்களில்தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.