2ம் நாளாக முடங்கிய கர்நாடக சட்டசபை இரவு, பகல் தர்ணா ஆரம்பித்த காங்கிரஸ்| Dinamalar

பெங்களூரு-கிராமிய மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ஈஸ்வரப்பாவை பதவியில் இருந்து நீக்கும்படி வலியுறுத்தி காங்கிரசார் இரண்டாவது நாளாக சட்டசபையை முடக்கி தர்ணாவில் ஈடுபட்டனர். அவரை நீக்கும்வரை போராட்டத்தை கை விட மாட்டோம் என்று, சட்டசபையிலேயே தங்கி, இரவு, பகல் தர்ணா நடத்தி வருகின்றனர்.டில்லி செங்கோட்டையில் கொடி ஏற்றுவது தொடர்பாக கிராமிய மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக காங்கிரசார் குற்றம் சாட்டினர்.எனவே அவரை, அமைச்சர் பதவியிலிருந்து நீக்க கோரி சட்டசபை, சட்ட மேலவையில் நேற்று முன்தினம் காங்கிரசார் தர்ணாவில் ஈடுபட்டனர். சட்டசபையில் தேசியக்கொடியை பிடித்து கொண்டு போராட்டம் நடத்தினர். இதை விட தேச துரோக செயல் வேறெதுவும் இருக்காது என சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி கூறினார்.தொடர் தர்ணாவால் கூட்டம் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. நேற்று காலை சட்டசபை கூடுவதற்கு முன், அவையை சுமுகமாக நடப்பது குறித்து ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்களுடன் சபாநாயகர் ஆலோசனை நடத்தினார். ஆனால் அவரது சமரச பேச்சு தோல்வியில் முடிந்தது.பின் சட்டசபை கூடியதும் ஈஸ்வரப்பாவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என காங்கிரசார் மீண்டும் போர்க்கொடி துாக்கினர். சபாநாயகர் இருக்கை முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.அப்போது இரங்கல் தீர்மானம் கொண்டு வந்ததால், அது முடியும் வரை காங்கிரசார் சற்று அமைதியாயினர். பின் மீண்டும் ஆக்ரோஷமடைந்து பா.ஜ.,வுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி பேசியதால் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது.எதிர்க்கட்சியினரின் தர்ணாவுக்கிடையில், கேள்வி நேரத்தை ஆரம்பிப்பதாக சபாநாயகர் கூறினார். காங்., உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பி கொண்டே இருந்தனர். பா.ஜ., – ம.ஜ.த., உறுப்பினர்கள் மட்டும் கேள்விகளை கேட்டனர்.அப்போது, தர்ணாவை கை விட்டு அவரவர் இருக்கைக்கு சென்று அமருங்கள் என சபாநாயகர் பலமுறை கூறியும் யாரும் கேட்கவில்லை. மாறாக இன்னும் சத்தமாக கோஷம் எழுப்பினர்.கேள்வி நேரம் முடிந்த பின், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பேசும்படி எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவை சபாநாயகர் அழைத்தார்.அவர் பேசாமல் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் மதியம் 3:00 மணிக்கு சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது. மதிய உணவு இடைவேளைக்கு பின் சட்டசபை மீண்டும் கூடியதும் காங்கிரசார் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் இன்று காலை 11:00 மணிக்கு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.ஈஸ்வரப்பாவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கும் வரை இரவு, பகல் தர்ணா நடத்துவதாக காங்., உறுப்பினர்கள் சட்டசபை வளாகத்திலேயே துாங்குகின்றனர். அவர்களை சபாநாயகர் சந்தித்து நலம் விசாரித்தார். அரசு தரப்பில், மெத்தை, தலையணை, உணவு, குடிநீர், போர்வை வழங்கப்பட்டது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.