அகமதாபாத்: 2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 49 பேரில் 38 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு, ஜூலை 26-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் 21 குண்டுகள் வெடித்தன. இதில் 56 பேர் கொல்லப்பட்டனர், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 70 நிமிடங்களில் எல்லாம் நடந்து முடிந்தது. இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு ஹர்கத் உல் ஜிஹாத் அல் இஸ்லாமி என்ற அமைப்பு பொறுப்பேற்றது.
13 ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கில், கடந்த 8-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, 49 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர், 28 பேர் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்களுக்கு இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன. இவர்களில் 49 பேரில் 38 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஒரே வழக்கில் இத்தனை பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படுவதை ஒட்டி அகமதாபாத் நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தாக்குதலின் மூளை! – இந்த குண்டுவெடிப்புக்கு முக்கிய காரணமாக இருந்தவர் சிமி-ஐஎம் அமைப்பைச் சேர்ந்த அப்துல் சுபான் குரோஷி. இந்தியாவில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பை நிறுவ இவர் முயற்சி செய்து வந்தார். இதையடுத்து இவரை தேடப்படும் குற்றவாளியாக குஜராத் போலீஸார் அறிவித்தனர். இந்தியாவின் பின்லேடன் என்று அறியப்பட்ட இவரை குஜராத் போலீஸார் 2018-ல் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்புலம்: கடந்த 2008-ம் ஜூலை 26-ல் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல்வேறு இடங்களில் சுமார் 70 நிமிட நேரத்தில் 21 குண்டுகள் தொடர்ச்சியாக வெடித்தன. இந்த தொடர் குண்டு வெடிப்பில் 56 பேர் உயிரிழந்தோடு 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 2002-ல் நடைபெற்ற கலவரத்தில் இஸ்லாமியர்கள் பலர் கொல்லப்பட்டதற்கு பழி வாங்கும் விதமாக இந்திய முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பு குண்டு வெடிப்பு நிகழ்த்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.
மேலும், இது தொடர்பாக மொத்தம் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 78 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் அரசுத் தரப்பு சாட்சியாக மாறினார். இதையடுத்து சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது 1100 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு 26 பேர் முக்கிய சாட்சிகளாக எடுத்து கொள்ளப்பட்டனர்.
சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு: 13 ஆண்டுகளாக நடந்த வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.பட்டீல் கடந்த 8-ம் தீர்ப்பு வழங்கினார். அதில், அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 49 பேரை குற்றவாளிகளாக அறிவித்து தீர்ப்பளித்தார். மேலும் போதுமான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் வழக்கில் இருந்து 28 பேரை விடுவித்து உத்தரவிட்டார்.
38 பேருக்கு தூக்கு: இந்நிலையில், குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கான தண்டனை விவரத்தை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.பட்டேல் இன்று அறிவித்தார். 49 குற்றவாளிகளில் 38 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் 11 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் குண்டுவெடிப்பில், உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ.1 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும்,
படுகாயமடைந்த நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் நிவாரண தொகையாக வழங்க வேண்டும் என்று நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.