5 நதிகளை இணைக்க டெல்லியில் இன்று ஆலோசனை: கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் தமிழகத்துக்கு பெரிய வரப்பிரசாதம்

சென்னை:

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தண்ணீர் பற்றாக் குறையை தீர்க்கும் வகையில் நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் பயன்பெறும் வகையில் கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, பாலாறு, காவிரி நதிகளை இணைக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

இதன் மூலம் மழைக் காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீர் பாசன மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இதில் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

மாநிலங்களின் ஒத்துழைப்பை பெற்று இதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

கோதாவரி-காவிரி நதி நீர் இணைப்பு திட்டம் தொடர்பாக தேசிய நதிநீர் மேம்பாட்டு அமைப்பு விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு கடந்த ஆண்டு அனுப்பி வைத்தது.

இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த திட்டத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது தங்களுக்கு 200 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்று தமிழகம் சார்பில் கோரிக்கை விடப்பட்டது. பாசனம், குடிநீர் மற்றும் தொழிற்சாலை தேவைகளுக்காக தமிழகத்துக்கு 84 டி.எம்.சி. தண்ணீர் வழங்கலாம் என்று திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்துக்கான பணிகளை மத்திய நீர்வளத்துறையினர் தொடங்கி உள்ளனர்.

இந்த திட்டம் தொடர்பாக டெல்லி ரபிமார்கில் உள்ள ஷ்ரம் சக்தி பவனில் இன்று பிற்பகலில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா ஆகிய 6 மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய நதிநீர் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய நீர் வளத்துறை செயலாளர் இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்குகிறார்.

தமிழகம் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப்சக்சேனா, காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இவர்களுக்கு உதவுவதற்காக தமிழக நீர்வளத்துறை குழுவினரும் டெல்லி சென்றுள்ளனர்.

இந்த கூட்டம் தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம் தமிழகத்துக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும்.

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய டெல்டா மாவட்டங்களும், சென்னை, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களும் என மொத்தம் 15 மாவட்டங்கள் பயன்பெறும்.

கோதாவரி நதி, கங்கைக்கு அடுத்தபடியாக நாட்டின் 2-வது நீளமான நதி ஆகும். இந்த நதி மகாராஷ்டிரா மாநிலம் திம்பகேஷ்வரில் உற்பத்தியாகி ஒடிசா, சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரா வழியாக 1,450 கிலோ மீட்டர் தூரம் பயணித்து வங்க கடலில் கலக்கிறது.

கோதாவரி ஆற்றில் ஆண்டு தோறும் மழைக் காலங்களில் 300 டி.எம்.சி. தண்ணீர் வீணாகி கடலில் கலக்கிறது. இந்த உபரி நீரை பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக கோதாவரி நதியை கிருஷ்ணா, பெண்ணாறு மற்றும் காவிரியுடன் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதே போல கிருஷ்ணா நதி மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா அருகே மகாபலீஸ்வரில் உற்பத்தியாகி தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா வழியாக 1,300 கிலோ மீட்டர் தூரம் பயணித்து விஜயவாடா அருகே வங்க கடலில் கலக்கிறது.

ஏற்கனவே கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதியை ரூ.55 ஆயிரம் கோடி செலவில் தெலுங்கானா அரசு இணைத்துள்ளது. இதற்காக போலேஸ்வரம் என்ற பெயரில் நீரேற்று திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

3 வடிவமைப்புகளில் கோதாவரி – காவிரி இணைப்பை செயல்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

முதல் வடிவமைப்பில் தெலுங்கானா மாநிலம் ஜெய்சங்கர் மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பள்ளியில் இருந்து தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை வரை 1,211 கிலோ மீட்டர் நீளத்துக்கு கால்வாய் அமைக்கப்பட உள்ளது. இதில் 19 கிலோ மீட்டர் சுங்க நீர்பாதையும் அடங்கும்.

இந்த திட்டம் மூலம் கால்வாய் பயணிக்கும் பகுதிகளில் 26 லட்சம் ஏக்கர் நிலங்கள் புதிதாக பாசன வசதி பெறும்.

இந்த திட்டத்தை செயல்படுத்த 2 இடங்களில் 60 மெகாவாட், 120 மெகாவாட் திறன் கொண்ட மின் நிலையங்கள் அமைக்க வேண்டும். தோதாவரி ஆற்றின் குறுக்கே ஈச்சம்பள்ளியில் 87 மீட்டர் நீளத்துக்கு 15.89 டி.எம்.சி. கொள்ளளவு கதவணை கட்டப்பட உள்ளது.

இதிலிருந்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி வெள்ள உபரி நீரை வெளியேற்ற வசதி செய்யப்படுகிறது. இங்கிருந்து நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள முஸி அணை வழியாக கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நாகார்ஜுன சாகர் அணைக்கு நீரை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

2-ம் வடிவமைப்பில் தெலுங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்டம் ஜனம்பேட்டில் கோதாவரி ஆற்றில் இருந்து 1,252 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் அமைத்து தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் காவிரியுடன் இணைக்கப்பட உள்ளது. இதற்காக 22 கிலோ மீட்டர் சுரங்க நீர் பாதையும் அமைக்க வேண்டும்.

இந்த திட்டத்தால் கால்வாய் பயணிக்கும் மாநிலங்களில் புதிதாக 19.6 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும்.

3-வது வடிவமைப்பில் ஜனம்பேட்டில் இருந்து நாகார்ஜுன சாகர் அணை வரை குழாய் மூலம் தண்ணீர் எடுத்து வர திட்டமிடப்பட்டுள்ளது. அங்கிருந்து கால்வாய் அமைத்து தஞ்சாவூர் கல்லணையில் இணைக்கப்பட உள்ளது. இதற்கு சுரங்கநீர் பாதை உள்பட 1,211 கிலோ மீட்டர் கால்வாய் அமைக்க வேண்டும்.

ஜனம்பேட்டியில் 67 மீட்டர் நீளத்துக்கு கோதா வரியில் கதவணை கட்ட வேண்டும். இந்த திட்டம் வாயிலாக புதிதாக 11 லட்சம் ஏக்கர் வரை பாசன வசதி கிடைக்கும்.

இந்த 3 வடிவமைப்புகளில் ஈச்சம்பள்ளி-கல்லணை இடையிலான முதல் வடி வமைப்பை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முழு ஒத்துழைப்பை வழங்கி உள்ளது.

தெலுங்கானா, ஆந்திரா, ஒடிசா, கர்நாடகா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநிலங்களின் ஒத்துழைப்பும் அவசியம்.

இந்த திட்டங்களுக்கு தெலுங்கானா மற்றும் ஆந்திராவின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகாவை பொறுத்த வரை தங்களுக்கும் நீரை வழங்க வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறது.

மேலும் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநிலங்களின் ஒத்துழைப்பும் அவசியம். மாநிலங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் பட்சத்தில் விரைவில் நதிநீர் இணைப்புக்கான பணிகள் தொடங்க வாய்ப்புள்ளது.

இதற்கிடையே கோதாவரி நதியை கல்லணையுடன் இணைக்காமல் கரூர் கட்டளை கதவணையில் கால்வாயை இணைக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

இதையும் படியுங்கள்… அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு வழக்கு: 38 பேருக்கு தூக்கு தண்டனை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.