காலி, வலஹன்தூவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் “Galle Techno Park” (தொழில்நுட்பப் பூங்கா), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டது.
“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம் தொழில்நுட்பப் புத்தாக்கல் கலாசாரத்தைக் (Cultural Technological Innovation) கட்டியெழுப்பும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, நாடு முழுவதிலும் ஐந்து “தொழில்நுட்பப் பூங்கா”க்களை நிர்மாணிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இலங்கையைத் தொழில்நுட்பப் புத்தாக்க கேந்திர நிலையமாக மாற்றியமைத்தல், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல், மேம்பட்ட தொழில்நுட்பத்துடனான புதிய நிறுவனங்களை ஊக்குவித்தல், ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட கைத்தொழில் அபிவிருத்தி, புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தல், அறிவுப் பகிர்வு, உரிய பிரதேச மக்களின் வாழ்க்கைத்தர அபிவிருத்தி மற்றும் அந்நியச் செலாவணியை ஈட்டுவதன் மூலம் தேசிய பொருளாதார அபிவிருத்திக்குப் பங்காற்றுவது இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
காலி, குருநாகல், கண்டி, நுவரெலியா மற்றும் ஹபரணை போன்ற பிரதேசங்களை மையமாகக் கொண்டே இந்தத் தொழில்நுட்பப் பூங்காக்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
காலி – வலஹன்தூவ தொழில்நுட்பப் பூங்கா வளாகத்துக்கு நேற்று (17) பிற்பகல் வருகை தந்த ஜனாதிபதி அவர்கள், திட்டப் பலகையைத் திறந்து வைத்ததுடன் பூங்காவுக்கான பணிகளையும் கண்காணித்தார். காலி தொழில்நுட்பப் பூங்காவின் இலச்சினையும், ஜனாதிபதி அவர்களால் அதிகாரபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.
சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் தொழில்நுட்ப பூங்காவின் நிர்மாணப் பணிகளை, 2023ஆம் ஆண்டு நடுப்பகுதியில் பூர்த்தி செய்வதற்கு தொழில்நுட்ப அமைச்சு எதிர்பார்த்துள்ளது.
5G தகவல் தொடர்புடன் கூடிய நவீன தொழில்நுட்ப வசதிகள், நெனோ ஆய்வு நிறுவனம், பொழுதுபோக்குச் செயற்பாடுகள், தெரிவு செய்யப்பட்ட இடங்களில் இயற்கையான சூழலுடன் கூடிய விளையாட்டு, உடல், உள ஓய்வு மையங்கள் அடங்கியதாக இந்தத் தொழில்நுட்பப் பூங்கா அமையப்பெறவுள்ளது.
காலி தொழில்நுட்பப் பூங்கா நிர்மாணிப்பு காரணமாகச் சுமார் 2,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெறுவதோடு, மறைமுகமாகவும் ஏராளமான வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன என்று, நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரண தெரிவித்தார்.
அதேபோன்று, கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறையின் முன்னேற்றத்துக்கு இந்தத் திட்டம் பெரும் பங்காற்றுவதாகவும் அமைச்சர் ரமேஸ் பத்திரண அவர்கள் தெரிவித்தார்.
இந்தப் புதிய தொழில்நுட்பப் பூங்காக்கள், இந்நாட்டின் பொருளாதாரத்துக்குப் பெரும் பங்காற்றுமென, தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டீ சில்வா அவர்கள் தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டு இறுதிக்குள், இந்நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்குவதற்கான பின்புலம் அமைக்கப்படும் என்று, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கிராம சேவகர் உட்பட ஜனாதிபதியின் செயலாளர் வரையான அனைத்து அரச சேவைச் செயற்பாடுகளும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் தொடர்புபடுத்தப்படும் என்றும் ஜனாதிபதி அவர்கள் வழங்கியுள்ள இலக்குகளைப் பூர்த்தி செய்து, எதிர்வரும் 30 மாதக் காலப்பகுதிக்குள் அனைத்துச் சேவைகளையும் இணையத் தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன என்றும் நாமல் ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார்.
தென் மாகாண ஆளுநர் விலீ கமகே, இராஜாங்க அமைச்சர் மொஹான் பி. டீ சில்வா, கஞ்சன விஜேசேகர, ஜானக்க வக்கும்புர ஆகியோரும் தென் மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
17.02.2022