அசம்பாவிதங்கள் இன்றி நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; தமிழகம் முழுவதும் அமைதியான வாக்குப்பதிவு: சென்னையில் குறைவாக பதிவான வாக்குகள்- 268 மையங்களில் 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, அசம்பாவிதங்கள் ஏதும் இன்றி அமைதியாக நடந்து முடிந்தது. மின்னணு வாக்கு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இவற்றில் மொத்தம் 12,820 வார்டுகள் உள்ளன. ஏற்கெனவே 218 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள வார்டு உறுப்பினர் பதவிகளை பிடிக்க 57,746 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 6 மணிக்கே வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அதில் அரசியல் கட்சிகளின் முகவர்கள் திருப்தி அடைந்த பின்னர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, வாக்குப்பதிவு தொடங்கப்பட்டது.

வாக்களிக்க வந்த அனைத்து வாக்காளர்களுக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து, கையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அவர்களுக்கு பிளாஸ்டிக் கையுறையும் வழங்கப்பட்டது. காலையில் சற்று மந்தமாக இருந்த வாக்குப்பதிவு, 11 மணிக்கு பிறகு விறுவிறுப்படைந்தது. சென்னையில் பெரும்பாலான வாக்குச்சாவடிகள் காலை முதலே வாக்காளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. பகல் வரை வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது.

மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடக்கும் என்றும், மாலை 5 முதல் 6 மணி வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்கலாம் என்றும் அறிவிக் கப்பட்டிருந்தது. அதனால், சில வாக்குச்சாவடிகளில் மாலை 5 மணிக்குள் வந்து வாக்களிக்க காத்திருந்தவர்களுக்கு மட்டும் டோக்கன்கள் வழங்கப்பட்டன. அவர்கள், 5 மணிக்கு மேல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் வாக்களிக்க ஒதுக்கப்பட்ட நேரத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

ஒருசில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டது. சில இயந்திரங்கள் சரி செய்யப்பட்டன. சில இடங்களில் இயந்திரங்கள் மாற்றப்பட்டன. இதனால் அந்த வாக்குச்சாவடிகளில் சிறிது நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. ஓரிரு வாக்குச்சாவடிகளில் பழுது நீக்க ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆனது. வாக்காளர்கள் பொறுமையாக காத்திருந்து வாக்களித்தனர். ஒருசில இடங்களில் சிறுசிறு வாக்குவாதங்கள், தள்ளுமுள்ளு போன்றவை ஏற்பட்டாலும் குறிப்பிடும் படியாக அசம்பாவிதங்கள் எங்கும் ஏற்படாமல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளது.

தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பதற்றமானவையாக கருதப்பட்ட 5,920 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார், ஆணைய செயலர் எ.சுந்தரவல்லி ஆகியோர் வெப் ஸ்ட்ரீமிங் முறையில், பதற்றமான வாக்குச்சாவடி நிகழ்வுகளை நேரலையில் கண்காணித்தனர்.

தேர்தல் பணியில் 1 லட்சத்து 33 அலுவலர்களும், பாதுகாப்பு பணியில் 1 லட்சத்து 13 ஆயிரம் போலீஸாரும் ஈடுபடுத்தப்பட்டனர். விதிமீறல்களை கண்காணிக்க 1,695 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர், சென்னை எஸ்ஐஇடி கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளம் நகராட்சியில் வாக்களித்தார். முன் னாள் முதல்வர் பழனிசாமியின் பெயர், அவரது சொந்த ஊரான சேலம் சிலுவம்பாளையம் வாக்காளர் பட்டியலில் உள்ளது. அது ஊரக உள்ளாட்சி என்பதால் ஏற்கெனவே நடந்த தேர்தலில் அவர் அங்கு வாக்களித்துவிட்டார். அதனால், இந்த தேர்தலில் அவர் வாக்களிக்கவில்லை.

மதுரை திருமங்கலத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் முஸ்லிம் பெண் வாக்காளர் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்தார். ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என அந்த வாக்குச்சாவடியில் இருந்த பாஜக முகவர் தடுத்துள்ளார். இதனால், அங்கு சிறிது நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமாரிடம் கேட்டபோது, அதுதொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்டிருப்பதாக தெரி வித்தார்.

மாலையில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன. பின்னர் அவை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மாநிலம் முழுவதும் உள்ள 268 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. பாதுகாப்பு மிகுந்த அறைகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அறைகளுக்கு உள்ளேயும், வெளியேயும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. வேட்பாளர்களின் முகவர்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை 22-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. காலை 11 மணி அளவில் முன்னணி நிலவரங்கள் தெரியவரும் என்று கூறப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை நாளில் மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு கருதி வேட்பாளர்களின் முகவர்கள் செல்போன்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாறிய வாக்குச்சாவடிகள்; அலைக்கழிக்கப்பட்ட வாக்காளர்கள்

கடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலின்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக வாக்காளர் பட்டியல் தொடர்பான புகார்கள் எழுந்தன. ஆனால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நேற்று வாக்குச்சாவடியில் வாக்களிக்க நின்றவர்களைவிட, வாக்குச்சாவடியை தேடி சாலையில் அலைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

மாநில தேர்தல் ஆணையம் சார்பில் வாக்குச்சாவடி சீட்டு (பூத் சிலிப்) வழங்கப்பட்டது. ஆனாலும், பெரும்பாலானவர்கள் அரசியல் கட்சிகள் வழங்கிய துண்டு சீட்டையே வாங்கிக் கொண்டு வந்தனர்.

உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்தவர்களும் வாக்காளர் பதிவு அலுவலர்களும் வாக்குச்சாவடிக்கு வெளியில் அமர்ந்து அங்கு வந்தவர்களுக்கு பட்டியலில் பெயரை பார்த்து பூத் சிலிப்களை வழங்கி வழிகாட்டினர். ஆனால், பல வாக்காளர்களின் விவரங்கள் மாறியிருந்ததால் அவர்களால் உடனடியாக கண்டுபிடிக்க இயலவில்லை. குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடத்தில் வாக்குச்சாவடி இருந்தது. பலருக்கு பூத் சிலிப்பில் முகவரி மாறியிருந்தது. இதுபோன்ற குழப்பங்களால் வாக்காளர்கள் அங்கும் இங்கும் அலைந்தனர். சில வாக்காளர்கள் அலைந்து தேடி வாக்குச்சாவடியை கண்டறிந்து வாக்களித்தனர். பலர், வாக்குச்சாவடிகளை தேடி அலைய முடியாமல் வீட்டுக்கு திரும்பிச் சென்றனர்.

சென்னையில் 43 சதவீதம் வாக்குப் பதிவு

சிலர் மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சென்று பூத் சிலிப்பை பதிவிறக்கம் செய்ய முயன்றனர். செயலி மூலமும் முயற்சி செய்தனர். ஒரே நேரத்தில் பலரும் முயன்றதால் சர்வர் முடங்கி சிக்கல் உருவானது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் வாக்குப்பதிவு குறைந்ததாக கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் சராசரியாக 43 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன.

படிவம் 17 ஏ தெரியாதா?

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 49-ஓ பிரிவின்படி, வாக்களிக்க விரும்பாதவர்கள் அதற்கான 17-ஏ படிவத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இதை பதிவேட்டில் பதிந்து அதற்கெதிராக சம்பந்தப்பட்ட வாக்காளரின் கையொப்பத்தை பெற வேண்டும். இது நடைமுறையாக உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நோட்டா வசதி இல்லாத நிலையில், 17-ஏ படிவத்தை பூர்த்தி செய்து அளிக்க வாக்குச்சாவடிக்கு சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு இந்த படிவம் குறித்த எந்த விவரமும் தெரிந்திருக்கவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.