திருப்பதி:
திருப்பதியில் அனைத்து பக்தர்களுக்கும் அன்ன பிரசாதம் மட்டுமே வழங்க தேவஸ்தானம் ஏற்பாடு செய்து வருகிறது. இதனால் திருப்பதி திருமலையில் இயங்கும் அனைத்து ஓட்டல்களையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி பழைய அன்னதான வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பயணிகளின் லக்கேஜ் கவுண்டர் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அன்னதான கூடத்தில் பக்தர்களை அனுப்புவது மற்றும் வெளியே அனுப்புவது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதையடுத்து திருமலையில் உள்ள ஓட்டல்களை ஆய்வு செய்து அங்கிருந்த பக்தர்களிம் தங்கும் வசதி, இலவச தரிசனம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
ஓட்டல்களை மூடுவதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் ராயலசீமா போராட்ட சமதி ஒருங்கிணைப்பாளர் நவீன்குமாரும் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பதியில் சாதாரண பக்தர்களுக்கு தரிசனம் வழங்குவதை விட வி.ஐ.பி. பக்தர்களுக்கு தரிசனம் வழங்குவதற்கு மட்டும் தேவஸ்தானம் முக்கியத்துவம் அளித்து வருகிறது.
தேவஸ்தான வளர்ச்சிக்கு அப்பகுதியில் உள்ள மக்கள் ஏற்கனவே வீடு, கடைகளை வழங்கி உள்ளனர். தற்போது அவர்கள் ஓட்டல், கடைகளை நடத்தி வருகின்றனர். திருமலையில் உள்ள ஓட்டல்களை மூட தேவஸ்தான குழுக் கூட்டத்தில் எடுத்த முடிவு தவறானது. இதனால் ஆயிரக்கணக்கான ஓட்டல் உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.
தேவஸ்தானம் பக்தர்களின் வசதிக்காக மட்டுமே செயல்பட வேண்டும். இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்ய முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சர்கள் தலைமையில் கமிட்டி அமைத்து கண்காணிக்க வேண்டும் என்றார்.