ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரடி காட்டும் தஞ்சை மாநகராட்சி ஆணையர்: நேரில் சந்தித்து பாராட்டிய நடிகர் நாசர்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்ற க.சரவணக்குமார், கடந்த ஆறு மாத காலமாக மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை மீட்டுள்ளார். மேலும், மாநகராட்சியின் வருவாயைப் பெருக்க, உள் வாடகைக்கு விடப்பட்டிருந்த கடைகளை மீட்டு, பொது ஏலம் விட்டு பல கோடி ரூபாய் வருவாயை பெருக்கியுள்ளார். இதனால் தஞ்சாவூர் மக்கள் மத்தியில் ஆணையருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில், தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு இன்று (19ம் தேதி) வந்த நடிகர் நாசர், மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து, பழ.நெடுமாறன் எழுதிய “காலத்தை வென்ற காவிய நட்பு” என்ற புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கினார். தொடர்ந்து, ஆணையர் சரவணகுமாரின் செயல்பாடுகளை பாராட்டி, உங்களின் பணிகள் இன்னும் சிறப்பாக அமைய வேண்டும் என கூறினார். பிறகு, மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலையை வணங்கி மரியாதை செலுத்தினர். அப்போது ஆணையர் சரவணகுமார் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

இதுகுறித்து நாசரின் உதவியாளர் கூறும்போது, “ தமிழீழ விடுதலைக்காக பாடுபட்ட பிரபாகரனின் ஆரம்ப கால வரலாற்றை மையமாக வைத்து, இயக்குநர் யோகேந்திரன் இயக்கிய திரைப்படம் ‘மேதகு’. அதன் இரண்டாம் பாகமான, மேதகு 2, திரைப்படம் ஷூட்டிங், தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடந்து வருகிறது.

இந்த படப்பிடிப்பில் நடிகர் நாசர் நடித்து வருகிறார். தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகளை துணிச்சலாக அகற்றி, பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை மீட்டது போன்ற செயல்கள் குறித்து அறிந்ததால், அவரை நேரில் சந்தித்து பாராட்ட வேண்டும் என்பதற்காக, நேரில் சென்று நாசர் பாராட்டினார்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.