திருமலை: கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது. தற்போது, ஹிஜாப் அணிவதற்கு இம்மாநில உயர் நீதிமன்றமே தடை விதித்துள்ளது. சீருடைய அணிந்து மட்டுமே பள்ளிக்கு அனைவரும் வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால், ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆந்திராவிலும் ஹிஜாப் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. விஜயவாடாவில் உள்ள லயோலா கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் வகுப்பறைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. ஹிஜாப்பை அகற்றி விட்டு வரும்படி கல்லூரி நிர்வாகம் உறுதியாக கூறி விட்டது. இதனால், அந்த மாணவிகள் கல்லூரி எதிரில் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர்.