ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 2.5 டன் மருந்து பொருட்களை அனுப்பியது இந்தியா

புதுடெல்லி:
உள்நாட்டுப் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் தற்போது கடும் நிதி நெருக்கடி மற்றும் உணவு பொருட்கள் நெருக்கடி அதிகரித்துள்ளது.
தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசை இதுவரை எந்த நாடும் அங்கீகரிக்காத நிலையில், மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் மட்டும் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ஆப்கான் மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் இந்திய அரசு மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை அனுப்பி வருகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1.6 டன் உயிர்காக்கும் மருந்துப் பொருட்கள், ஜனவரி 1-ம் தேதி 5 லட்சம் டோஸ்கள் கோவாக்சின் தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டது.  3-வது கட்டமாக 2 டன் உயிர்காக்கும் மருந்துப் பொருட்கள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்டன.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு ஐந்தாவது கட்டமாக 2.5 டன் மருந்துப் பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாகி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஆப்கானிஸ்தான் மக்களுடன் எங்களது சிறப்பான கூட்டாண்மை தொடர்கிறது. இந்தியா இன்று ஆப்கானிஸ்தானுக்கு 2.5 டன் மருத்துவ உதவி மற்றும் குளிர்கால ஆடைகளை கப்பலில் அனுப்பியுள்ளது என பதிவிட்டுள்ளார்.
மேலும், பாகிஸ்தான் வழியாக சாலைப்பயணம் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு 50 ஆயிரம் டன் கோதுமையை அடுத்த வாரம் இந்தியா அனுப்ப உள்ளது எனவும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.