இந்தூர்:
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் அமைக்கப்பட்ட சாண எரிவாயு ஆலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இங்கு நாளொன்றுக்கு 550 டன் பிரிக்கப்பட்ட மட்கும் குப்பைகள் சுத்திகரிக்கப்படும். அதேபோல நாளொன்றுக்கு 17,000 கிலோ இயற்கை எரிவாயு, 100 டன் இயற்கை உரம் உற்பத்தி செய்யப்படும்.
கோவர்தன் ஆலை என்று பெயரிடப்பட்ட இந்த ஆலையானது, கழிவுப்பொருட்களை பணமாக்கும் கண்டுபிடிப்பு என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
ஆலையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, ‘நாடு முழுவதும் உள்ள நகரங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்துள்ள லட்சக்கணக்கான டன் குப்பைகள் காற்று மற்றும் நீர் மாசுபாட்டை ஏற்படுத்தி உள்ளது. இது நோய்கள் பரவுவதற்கு முக்கிய காரணமாகும். எனவே, தூய்மை இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், இந்த பிரச்சினை தீர்க்கப்படுகிறது’ என்றார்.
கடந்த ஆண்டு தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக தூய்மையான நகரம் என்ற பெருமையை பெற்ற இந்தூர் நகரைப் பற்றிப் பேசிய பிரதமர் மோடி, இந்தூரின் பெயரைச் சொன்னவுடனேயே தேவி அஹில்யாபாய் ஹோல்கரும் அவரது சேவையும் நினைவுக்கு வருவதாக கூறினார். இந்தூர் என்றவுடன் தூய்மைப் பணியும் நினைவுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆலை பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தை குறைத்து இயற்கை உரத்தை வழங்குவதோடு, பசுமை எரிசக்தியையும் வழங்கும். இந்த ஆலைக்காக ரூ.150 கோடி செலவிடப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யும் இயற்கை வாயுவில் 50 சதவீதத்தை இந்தூர் நகராட்சி கொள்முதல் செய்யும். இந்த எரிவாயு நகர பேருந்துகளில் எரிபொருளாக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.