வாஷிங்டன்,
வெள்ளை மாளிகையில் ரஷியா-உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
உக்ரைன் விவகாரத்தில் ரஷியா, உக்ரைன் மீது படையெடுப்பதற்காக தவறான தகவல்களை அளித்துள்ளது. மேலும் தவறான தகவல்கள் ரஷ்ய மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன.
ரஷியாவின் 40 சதவீத ராணுவ படைகள் தாக்குதல் நடத்த ஏதுவாக உக்ரைன் எல்லையில் முகாமிட்டுள்ளன. கடந்த வாரம் சில படைகளை ரஷியா பின் வாங்கியிருந்தாலும் இப்போதும் அங்கு 1,50,000 படைகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ரஷிய அதிபர் புதின், உக்ரைன் மீது அடுத்த வாரம் அல்லது அடுத்த சில தினங்களில் தாக்குதலை தொடங்கலாம். அப்படியிருக்கையில், ரஷியா உக்ரைனின் தலைநகரான கையிவ் நகரத்தை விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்.
இன்னும் காலம் கடந்து போகவில்லை, ரஷிய அதிபர் புதின் அமைதி பேச்சுவார்த்தைக்கு வரலாம்.
மேலும், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி இந்த வாரம் முனிச் பாதுகாப்பு கருத்தரங்கில் பங்கேற்பது அவருடைய விருப்பம்.
அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் உக்ரைன் மக்களுக்கு துணை நிற்கும். ரஷியா மீது கடுமையான நடவடிக்கைகள் மற்றும் தடைகள் தொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்” என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பு தெரிவித்திருப்பதாவது, ‘கிழக்கு உக்ரைனில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது. கிழக்கு உக்ரைனை, அந்த பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள டானெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிரிவினைவதிகள் ரஷிய படைகளுடன் சேர்ந்து தாக்குதலில் ஈடுபடலாம் என்று தெரிவித்துள்ளது.