புதுடெல்லி: உத்தர பிரதேச தேர்தலில் பாஜக முதல்வர் ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியிலும், எதிர்க்கட்சி சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் சிங் யாதவ் கர்ஹால் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இருவருமே சட்டப்பேரவை தேர்தலை முதல் முறையாக சந்திக்கின்றனர்.
அகிலேஷின் மக்களவை தொகுதியான மெயின்புரியில் அடங்கியது கர்ஹால் தொகுதி. இங்கு, ஆக்ரா மக்களவை தொகுதிபாஜக எம்.பி.யாக இருக்கும்எஸ்.பி.சிங் பகேல், அகிலேஷ் சிங்கை எதிர்த்து போட்டியிடுவது பெரும் சவாலை ஏற்படுத்தி உள்ளது.
அகிலேஷின் தந்தையும் சமாஜ் வாதி நிறுவனருமான முலாயம் சிங் சீடராக இருந்து அரசியல் கற்றவர் பகேல். உ.பி. முதல்வராக இருந்த முலாயம் சிங் பாதுகாப்பு படையில் துணை ஆய்வாளராக இருந்தவர் பகேல். இதன்மூலம், முலாயமுக்கு நெருக்கமானார். பின்னர் அவரையே, தன் குருவாக ஏற்று அரசியலில் இறங்கினார். சமாஜ்வாதியில் முக்கிய இடம் பெற்ற பகேல், கடந்த 1998, 1999 மற்றும் 2004 மக்களவை தேர்தலில் எம்.பி.யானார்.
எனினும், 2010-ல் சமாஜ் வாதியுடன் மோதல் ஏற்பட்டதால், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் (பிஎஸ்பி) பகேல் இணைந்து 6 ஆண்டுகள் அங்கிருந்தார். பிறகு பாஜக.வில் இணைந்தவர், உ.பி.யின் டுண்ட்லா தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். பாஜக.விலும் முக்கிய இடம் பெற்றபகேல், 2019 மக்களவை தேர்தலில் ஆக்ராவில் போட்டியிட்டு எம்.பி.யானார். மத்திய அமைச்சரவையில் அவருக்கு சட்டத் துறை இணை அமைச்சர் பதவியும் வழங்கப் பட்டது. இப்போது, பாஜக சார்பில் முன்னாள் அரசியல் குருவின் மகன் அகிலேஷை எதிர்க்கும் முக்கிய தலைவராக பகேல் உருவாகி இருக்கிறார்.
அகிலேஷின் யாதவ சமூகத்தி னர் 38 சதவிகிதமுள்ள கர்ஹாலில் 1993 முதல் சமாஜ்வாதி தொடர்ந்து வெற்றி பெறுகிறது. இதற்கு கர்ஹாலிலுள்ள ஜெயின் கல்வி நிறுவனத்தில் 8 ஆண்டுகள் பயின்ற முலாயம் சிங் தொடர்ந்து அதில் 21 ஆண்டுகளாக ஆசிரியராகவும் பணியாற்றியது காரணம்.
கடந்த 2017 பேரவை தேர் தலில் பிரதமர் மோடி அலை வீசியும் கர்ஹாலில் பாஜக வெற்றிபெறவில்லை. எனவே, பாதுகாப்பான கர்ஹாலை அகிலேஷ் தேர்வுசெய்துள்ளார். இவரை எதிர்த்துபோட்டியிடும் பகேல், சமாஜ்வாதிக்கு பெரும் சவாலாகி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பிரச்சாரம் செய்யவந்த பகேல் மீது கர்ஹாலில்தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு வழங்கப்படும் ஒய் பிரிவு பாதுகாப்பு இசட் பிரிவாக மாற்றப்பட்டுள்ளது. இந்ந்நிலையில் முதல் முறை யாக உ.பி.யில் நேற்று மகன் அகிலேஷை ஆதரித்து கர்ஹாலில் பிரச்சாரம் செய்தார் முலாயம் சிங். இங்கு மூன்றாவது கட்ட தேர்தலாக பிப்ரவரி 20-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.